Pages

Thursday, December 31, 2009

புதுசு


எதுவாருந்தாலும் அது புதுசா இருந்தா அதோட மவுசே தனி தான்.


சின்ன பையனா இருந்த போது புது துணி, புது விளையாட்டு
ஸ்கூல்ல படிக்கும்போது புது பேனா, புது பேக், புது பென்சில்
காலேஜூல படிக்கும்போது புது கேர்ல்பிரண்டு, புது கிளாஸ்ரூம், புது பாடம்(படம்), புது லெக்சரர்
வேலைக்கு போனதுக்கு அப்புறம் புது பைக், புது கார், புது வீடு, புது பொண்டாட்டி

இப்படி வாழ்க்கையோட ஒவ்வொரு ஸ்டேஜுலயும் நாம சந்திக்கிற பல விசயங்கள் புதுசு தான். அப்படிப்பட்ட புதுசு எல்லாமே நமக்கு மாற்றத்தையும் சந்தோசத்தையும் தான் தந்திருக்கு.


அதே மாதிரி வரப்போற இந்த புது வருசமும் நமக்கு சந்தோசத்தையே தரும்னு எதிர்பார்க்கிறேன்.


இந்த வருசம் சந்தோசத்தை மட்டும் தராம புது நட்பு, வெற்றி, தோல்வி, கவலை, ஏமாற்றம், எதிர்பார்ப்பு, காதல், பாசம் என எல்லாம் கலந்த கலவையை கொடுக்கட்டும்னு கடவுளை வேண்டிக்கிறேன்.


கிடைக்கக்கூடிய வெற்றியானது தோல்விய விட குறைஞ்சது ஒரு சதவீதமாவது அதிகமா இருக்கட்டும்னு எதிர்பார்க்கிறேன்.
மற்றபடி உலகிலுள்ள எல்லா மக்களும் மிக மகிழ்ச்சியா இருக்க என் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன்.


அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


- அன்பரசன்.

Sunday, December 20, 2009

வியப்பு



அதிகாலை சூரியன்
வயல்காடு
தென்னந்தோப்பு
அந்திப்பொழுது
பௌர்ணமி நிலவு
சிறு குழந்தை
இவையனைத்தையும்
ரசித்த போது
வராத கவிதை
அவள் முகம் பார்த்த
நொடிப்பொழுதில்
அருவிபோல்
வந்து விழுவதேன்?

- அன்பரசன்.

Thursday, December 10, 2009

வேண்டுதல்

எனது மாமா பெயர் முத்து. ஆனால் எல்லோரும் அவரை அப்பன் என்றே செல்லமாக அழைப்பதுண்டு. அவர் இருக்கும் இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும். அந்த அளவுக்கு ஜாலி பேர்வழி. எல்லோரிடமும் மிகவும் சகஜமாகவும் அன்பாகவும் பழகுவார்.எங்கள் ஊருக்குள் அவரை தெரியாதவர்களே கிடையாது. அந்த அளவிற்கு எல்லோருக்கும் பரிச்சயமானவர். சொல்லப்போனால் அவர் கேலி, கிண்டல் செய்யாத ஆட்களே ஊருக்குள் கிடையாது.

குழந்தைகளை அழ வைப்பது, பெரியவர்களை கண்டால் சட்டைப்பையில் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு திருப்பி தர மறுப்பது, ஒரு தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையை அதன் அம்மா முன்னாலேயே எடுத்து கொண்டு போய் அடுத்த தெருவில் விட்டு வருவது, பரிட்சைக்கு போகும் சிறுவர்களின் பரிட்சை அட்டையை பிடுங்கிக்கொண்டு தர மறுப்பது, அமைதியாக செல்பவரை எந்த காரணமும் இன்றி சிறிது தூரம் துரத்துவது என அவர் செய்யும் சேட்டைகள் ஏராளம்.மொத்தத்தில் அவர் செய்யும் குறும்புகள் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு சென்றிருந்த போது அவரை சந்தித்தேன்.வழக்கமாக சகஜமாக பேசுபவர் இம்முறை நானாக சென்று பேசியும் சரியாக பேசவில்லை. அவரிடம் வழக்கமாக இருக்கும் கலகலப்பு இம்முறை இல்லை.பின்பு நண்பர்களிடம் விசாரித்ததில் தெரிந்தது அவருக்கு ஏழு மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டத்தில் இவ்வாறு ஆனது என்று.ஒரு வாகனம் மோதியதில் அவரது நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு பல வார சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி இருக்கிறார்.

சிகிச்சை முடிந்த பிறகும் கூட அவர் பழைய நிலைக்கு திரும்பவில்லை.எதற்கெடுத்தாலும் கோபப்படுவது, அடிக்கடி வீட்டில் சண்டையிடுவது, எப்போதும் எதையோ பறிகொடுத்தவர் போல் இருப்பது என அவரது நடவடிக்கைகள் நேரெதிராக மாறிவிட்டன.உறவினர்கள், நண்பர்கள் எவ்வளவோ முயன்றும் அவரது இந்த நடவடிக்கைகளை மாற்ற முடியவில்லை.

மிக நல்ல குணம் கொண்ட ஒரு மனிதர் இவ்வாறு இருப்பதை என்னால் தாங்க முடியவில்லை.அவர் திரும்பவும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். அவரது பழைய சுறுசுறுப்பு, கலகலப்பு, மகிழ்ச்சி அனைத்தையும் அவர் திரும்ப பெற வேண்டும்.எனது இந்த கோரிக்கையை மட்டும் நிறைவேற்றும் படி ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

Saturday, December 5, 2009

அம்மா



சுழலும் நாற்காலி
பளபளக்கும் மேஜை
பளிங்கு தரை
வண்ண திரைச்சீலை
ஆர்டர் கேட்க பவ்யமாய் சர்வர்
விதவிதமாய் உணவு வகைகள்
கை நிறைய பணம்
இத்தனையும் இருந்தும்
மனம் ஏங்குகிறது
"கண்ணு பழைய சோத்துல தண்ணி
ஊத்தி வச்சிருக்கேன்.
தயிர ஊத்தி ஒரு வாய் சாப்பிட்டு போடா"
என்ற அம்மாவின் காலை நேர குரலுக்காக...


- அன்பரசன்