Pages

Tuesday, November 30, 2010

தப்பிக்க வழியே இல்லியா???

ஊரை விட்டு தொலைவில் இருப்பதால் தமிழ்நாட்டில் அன்றாடம் நடப்பவற்றை தெரிந்து கொள்ள நான் தினமலர் படிப்பது வழக்கம்.

சமீபத்தில் அவ்வாறு படித்து கொண்டிருக்கும்போது இதைப் படித்தேன்.
எனக்கு ஒரே அதிர்ச்சியா இருந்தது. நம்ம அழிவு நெருங்கிருச்சுன்னு நெனச்சேன். ஏற்கனவே இதக்கேள்விப்பட்டு நெறையப்பேரு ஆஸ்பத்திரில அட்மிட் ஆயிருக்கறதா கேள்விப்பட்டேன். எனக்கு வேற பிஞ்சு மனசு. அது தாங்குமா இல்லையான்னு வேற தெரியலையே.
இந்த நாள்ல ஆம்புலன்சு வசதி வேற கிடையாதாம். ஏன்னா எல்லாத்தையும் இந்த வைபோவத்துக்காக முன்கூட்டியே ரிசர்வ் பண்ணி வச்சுட்டாங்களாம்.இந்தமாதிரி தவிச்சுட்டு இருந்தப்பதான் இந்த செய்திய படிச்சேன். கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருந்தது. ஆனாலும் என்ன சந்தோசம் ஒரு ஆறு வாரத்துக்கு மட்டும்தானே. அதுக்கு அப்புறமா எப்படியும் இதை சமாளிச்சுதான் ஆகணும்.

இதுக்கே என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கும்போது அடுத்த இடியா இந்த தகவல்.
ஒரு தாக்குதலையே சமாளிக்க பயங்கரமா பிளான் பண்ணவேண்டி இருக்கே. அதுக்குள்ள அடுத்த அஸ்திரத்தை எடுத்துட்டாங்களே.

நான் ஏன் இந்த அளவுக்கு பதர்றேன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு. நாங்க இருக்குற ஏரியாவுல தமிழ் படங்கள் அதிகமா ரிலீஸ் ஆகாது. எப்பவாவது ஒரு படம் ரிலீஸ் ஆகும். ஆனா பாருங்க நம்ம டாக்டர் தம்பியோட படம் மட்டும் கரெக்டா ரிலீஸ் பண்ணிருவாங்க. நம்ம அறைத்தோழனுக்கு சினிமான்னா ரொம்ப இஷ்டம். எந்த தமிழ் படம் போட்டாலும் உடனே டிக்கெட் புக் பண்ணிடுவான். இப்படித்தான் இதுக்கு முன்னாடி கூட ஏதோ எறாவோ சுறாவோ ஒரு படம், அதுக்கு முன்னாடி சாட்டைக்காரனோ வேட்டைக்காரனோ ஏதோ ஒண்ணு முன்கூட்டியே (கேக்காம) புக் பண்ணித்தொலச்சதுனால போயிருந்தோம். அப்பப்பா ஒரே ரணகளம் போங்க. { அதிலும் குறிப்பாக சொறா படத்துக்கு போகும்போது முந்தின ஷோ பாத்த ஒரு நண்பன் சொன்னான் "டே புக் பண்ணின காசு போனாபோகுது. தயவுசெஞ்சு போகாத, மூணுமணி நேரமாவது மிஞ்சும்". அதையும் மீறிப்போயி :( }

நான் தப்பிக்க வழி எதுவுமே இல்லையா??

நீதி : ஒருத்தன் சாகறது முடிவாயிட்டா அவனை ஏற்கனவே செத்தவனாலகூட காப்பாத்த முடியாது.

பி.கு :
இந்த அதிர்ச்சி தரும் தகவல்களை படிச்சத்தில் இருந்து தினமலர் வெப்சைட்டில் சினிமா செய்திகள் பக்கமே போறதில்ல.

Thursday, November 25, 2010

தல ரஜினி

முதலில் இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைத்தமைக்கு பதிவுலகில் பாபு அவர்களுக்கு நன்றி.


ரஜினி..

அநேகமாக ஒவ்வொரு சினிமா ரசிகருக்கும் தெரிந்த ஒரு பெயர். ஒரு ஒப்பற்ற கலைஞர் (ஆனால் சமீபகாலமாக அவரை மையமாக வைத்து ஜோக்ஸ் பரப்பப்படுவது சிறிது சங்கடமாக இருக்கிறது). அறிமுகம் தேவை இல்லை என நினைக்கிறேன். அவரைப்பற்றியும் அவரது நடிப்பைப் பற்றியும் எக்கச்சக்கமாக எழுதலாம்.

சிறுவயதில் நகைச்சுவைக்காக பார்க்க ஆரம்பித்து பின் அவரது ஸ்டைல் மற்றும் நடிப்பில் அசந்துபோய் ரசிகனாய் மாறிவிட்டேன். ரஜினியின் மொத்த படங்களில் இருந்து பத்தை மட்டும் பிரித்தெடுப்பதென்பது அவ்வளவு எளிதானதல்ல. இருப்பினும் மிக ரசித்த படங்கள் என நான் நினைப்பதை வரிசைப்படுத்துகிறேன்.

படங்கள் மற்றும் அவற்றை பிடிக்க காரணம்:

படையப்பா
நகைச்சுவை மற்றும் அவரது ஸ்டைல்
ஜானி
காற்றில் எந்தன் கீதம் என்ற பாடலுக்காக மட்டுமே படம் பார்க்க ஆரம்பித்து பின் மொத்த படமும் பிடித்துப்போய் விட்டது. (இந்த படத்தின்போது ஸ்ரீதேவிக்கு வெறும் 17 வயசு மட்டுமே என்பது உபரிதகவல்).
பாட்ஷா
அசாத்தியமான ஸ்டைல்
அண்ணாமலை
குஷ்பூ மற்றும் ஜனகராஜ் உடனான நகைச்சுவைக் காட்சிகள், சரத்பாபு உடனான நட்பு மற்றும் மோதல்.
தளபதி
நல்ல நட்பிற்க்கு ஒரு சிறந்த உதாரணம்.
16 வயதினிலே
என்னதான் வில்லனா இருந்தாலும் ரொம்ப பிடிச்சிருந்தது (காரணம் சொல்லத்தெரியல).
தர்மத்தின் தலைவன்
வாத்தியார் ரஜினியின் நகைச்சுவைக் காட்சிகள்.
நல்லவனுக்கு நல்லவன்
ஒரு அப்பாவாக(நான் இல்லீங்க ரஜினி) மிகப் பிடித்திருந்தது.
முரட்டுக்காளை
பொதுவாக எம்மனசு தங்கம் மற்றும் அவரது தம்பிகளுடனான நகைச்சுவைக் காட்சிகள்.
பில்லா
ஒரு டானாக ரஜினி மிகப்பொருந்தி வந்தார்.

தில்லுமுல்லு, மூன்று முகம், முத்து, முள்ளும் மலரும், தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், நான் சிகப்பு மனிதன் இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். பத்து மட்டுமே என்பதால் எல்லாவற்றையும் குறிப்பிட இயலவில்லை.

அவர் நடித்து எனக்கு பிடித்த பாடல்கள் சில இதோ:

முத்தமிழ்கவியே வருக - தர்மத்தின் தலைவன்
பேசக்கூடாது, ஆசை நூறுவகை - அடுத்தவாரிசு
சந்தனக்காற்றே - தனிக்காட்டுராஜா
காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு
தோட்டத்தில பாத்திகட்டி - வேலைக்காரன்
நூருவருஷம் - பணக்காரன்
(இன்னும் பல என்பதால் வெறும் சேம்பிளோடு நிறுத்திக்கொள்கிறேன்.)

Tuesday, November 23, 2010

குஜாரிஷ்

சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் ரோனி ஸ்குருவாலா தயாரித்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி ஹ்ருதிக், ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடித்து ஹிந்தியில் வெளிவந்துள்ள படம்தான் குஜாரிஷ்.


நண்பனின் சதியின் காரணமாக ஒரு விபத்தில் சிக்கி பதினான்கு வருடங்களாக க்வாட்‌ரிப்‌லிஜியா நோயால் அவதிப்படும் நாயகன் ஹ்ருதிக் மெர்ஸி கில்லிங்க்காக கோர்ட்டில் அப்ளை செய்கிறார். ஆனால் கோர்ட் அதற்கு மறுத்து பெட்டிஷனை ரத்து செய்கிறது. இதனால் சிறிதுகாலம் அமைதியாக இருக்கும் நாயகன் பின்பு தனது ரேடியோ ரசிகர்களின் உதவியுடன் மீண்டும் மெர்ஸி கில்லிங்க்காக அப்ளை செய்கிறார். அதன்பின்பு அவருக்கு என்ன தீர்ப்பு கிடைக்கிறது மற்றும் அவரது முடிவு என்ன என்பதே கதை.

புகழ்பெற்ற மேஜிசியனாக வருகிறார் ஹ்ருதிக். அவரது வளர்ச்சி பொறுக்காமல் அவரது நண்பர் சித்திக் ஒரு ஷோவின்போது விபத்தை ஏற்படுத்தி விடுகிறார். அதன் காரணமாக கழுத்துக்கு கீழே உணர்வற்று போய்விடுகிறது. நோயுடனே பதினான்கு வருடங்களை கடத்துகிறார். இடையில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரேடியோ ஜாக்கியாக வேலை செய்து அதிலும் புகழ்பெறுகிறார்.

நடிப்பில் அசத்தி இருக்கிறார் ஹ்ருதிக். ஒவ்வொரு காட்சியிலும் அவர் கண்கள் பேசுகின்றன. அவர் படும் அவஸ்தையை நமக்கு தனது முகம் மூலமாகவே வெளிப்படுத்துகிறார். நாயகனை பராமரிக்க வரும் செவிலியராக ஐஸ்வர்யா ராய். ஐஸ்க்கு நீண்டநாள் கழித்து நடிப்புத்திறமையை காட்ட ஒரு நல்ல வாய்ப்பு இந்த கதாபத்திரம். ஐஸ் ஹ்ருதிக் உடன் போட்டி போடுகிறார் நடிப்பில். இவர்கள் இருவருக்கும் இடையிலான காட்சிகள் ஒவ்வொன்றும் அருமை.


சித்திக்கின் மகனாக வரும் ஆதித்யா ராய் கபூரும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். நாயகனின் வக்கீல் நண்பியாக வரும் ஷெர்னா பட்டேல் நட்புக்கு புது அவதாரமாக திகழ்கிறார்.

படம் முழுக்க கோவாவில் படமாக்கியிருப்பதால் ஒவ்வொரு காட்சியிலும் கண்ணுக்கு குளிர்ச்சி இயல்பாகவே வருகிறது (அந்த குளிர்ச்சி இல்லை. இது இயற்கை). வித்தியாசமான கதைக்களம் என்பதால் இயக்குநர் திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது.

வழக்கமான திரைப்படங்களை போல இதில் எந்த மசாலாத்தனமும் கிடையாது. இந்த படத்தை ரசிப்பதற்கு பொறுமை மிக அவசியம். மொத்தத்தில் கலாரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்து. ஒவ்வொரு ரசிகனும் தவறாமல் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம். (இந்த வருடத்தில் நான் பார்த்த மொத்த இந்தி படங்களிலேயே சிறந்ததாக இதனை சொல்லலாம்.)

Sunday, November 14, 2010

கோழியும் நானும்


என் பெயர் சுகன். நான் ஒரு தனியார் நிருவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள் அலுவலகத்தில் நடந்த பார்ட்டி ஒன்றுக்கு போயிருந்தேன். அவ்வப்போது பார்ட்டிகளில் குடிப்பது வழக்கம். அன்றும் அப்படித்தான் போதை கொஞ்சம் அதிகமாகிவிட்டமையால் தள்ளாடியபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். மனைவி அமலா ஏற்கனவே தூங்கிவிட்டிருந்தாள். அவளுக்கு அருகே அதே உடையுடன் தூங்கிவிட்டேன்.

தூங்கி எழுந்த போது என் படுக்கை அருகே ஒரு புதுஆள் நின்றிருந்தான். நான் அவனிடம் " யார் நீ? அதுவும் என் படுக்கையறையில்" என்றேன். அதற்கு அவனோ " நான் தான் எமன். இது உன் படுக்கையறை அல்ல" என்றான். நான் " என்ன நான் இறந்துட்டேனா? அதுமட்டும் ஆகாது. நான் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. என் குடும்பத்துக்கு ஒரு குட்பை கூட சொல்லலை. என்னை நீ திருப்பி அனுப்பு " என்றதற்கு அவனோ(ரோ) "அனுப்பலாம். ஆனால் ஒரு நாயாகவோ அல்லது கோழியாகவோ மட்டுமே " என்றான்.

என் வீட்டிற்கு அருகில் ஒரு கோழிப்பண்ணை இருப்பது நினைவுக்கு வந்ததால் நானும் ஒரு கோழியா மாறி திரும்பிவர சம்மதித்தேன். அதன்படியே எமனும் என்னை திருப்பி கோழி உருவில் அனுப்பினான்.

பண்ணைக்குள் சுற்றிக்கொண்டிருந்தபோது ஒரு சேவல் எதிரே வந்தது. "நீ தான் புதுசா வந்திருக்கிற கோழியா? எப்படி இருக்கு முதல்நாள் அனுபவம்" எனக் கேட்டது. நான் " நல்லாத்தான் இருக்கு. ஆனா ஒரு வித்தியாசமான ஃபீலிங். அதாவது நான் உள்ளுக்குள் வெடிக்கிறமாதிரி இருக்கு" என்றேன். அதுவோ " நீ முட்டை இடப்போறே. இதுக்கு முன்னாடி நீ முட்டை இட்டதே இல்லையா என்ன?" என்றது. நான் "இல்லை" என்றேன். "கொஞ்சம் ரிலாக்சா இரு. தானா வந்துடும்" எனக்கூறி விடைபெற்றது.

ஒரிரு வினாடிகளில் பின்புறமாக ஒரு முட்டை கீழே வந்து விழுந்தது. எனக்கு மிகமிக சந்தோசமாக இருந்தது ஏனென்றால் முதன்முறையாய் நான் தாய்மையடைந்து விட்டதால். இரண்டாவது முட்டை இட்டபோது அந்த மகிழ்ச்சி இன்னும் இரட்டிப்பானது. அதே சந்தோசத்தோட மூணாவது முட்டை இடும்போது என் பின்னந்தலையில் ஒரு அடி இடியாய் இறங்கியது கூடவே என் மனைவி குரலும் " யோவ் நீ உக்காந்து இருக்குறது நம்ம படுக்கை மேல".


[இணையத்தில் உலவுகையில் எங்கோ எப்போதோ படித்தது.]

Thursday, November 11, 2010

பார்வைஎன்றோ ஓர்நாள்
நீ வீசிச்சென்ற
கடைவிழிப்பார்வை
இன்றேனும் கிடைக்காதா
என அன்றாடம்
ஏங்கித்தொலைக்கும்
என் மனத்தை
என்ன செய்ய?

Monday, November 8, 2010

அவுட்லுக் - ஒரு பயனுள்ள தகவல்

நம்மில் நிறையபேர் மின்னஞ்சலுக்காக அவுட்லுக் பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு பயன்படுத்தும்போது சில நேரங்களில் நம்மையும் அறியாமல் மின்னஞ்சலின் தலைப்பு தர மறந்து விடுவோம். அலுவலகத்தில் இவ்வாறு நேர்ந்து விட்டால் அது நம்மைப்பற்றி மற்றவர் தவறாய் நினைக்க நேரிடலாம்.
அவ்வாறு நேராமல் தடுக்க ஒரு சிறு வழி இதோ.

1. முதலில் அவுட்லுக்கை திறந்து கொள்ளவும்.
2. பின் Alt+F11 கீகளை ஒருசேர அழுத்தவும். விசுவல் பேசிக் எடிட்டர் திறக்கும்.
3. பின் Ctrl+R கீகளை அழுத்தவும். இது ப்ராஜெக்ட்-ப்ராஜெக்ட்1 என்ற கோப்பை திறக்கும்.
4. அதில் இடதுபக்க மூலையில் Microsoft Outlook Objects அல்லது Project1 என்ற எழுத்து கிடைக்கும். 5. அதனை விரித்தால் ThisOutLookSession என்பதை காணலாம். அதன்மீது இருமுறை அழுத்தவும் (Double click). இது ஒரு Code pane ஐ வலது புறத்தில் திறக்கும்.
6. கீழே உள்ளவற்றை காப்பி செய்து அதில் பேஸ்ட் செய்து பின் சேமிக்கவும்.
Private Sub Application_ItemSend(ByVal Item As Object, Cancel As Boolean)
Dim strSubject As String
strSubject = Item.Subject
If Len(Trim(strSubject)) = 0 Then
Prompt$ = "Subject is Empty. Are you sure you want to send the Mail?"
If MsgBox(Prompt$, vbYesNo + vbQuestion + vbMsgBoxSetForeground, "Check for Subject") = vbNo Then
Cancel = True
End If
End If
End Sub

அடுத்த முறை நீங்கள் மின்னஞ்சலை தலைப்பில்லாமல் அனுப்பும்போது ஒரு பாப்-அப் மெனு வந்து அதனை சுட்டிக்காட்டும்.

Sunday, November 7, 2010

ஆக்ச‌ன் ரீப்ளே

விபுல் ஷா தயாரித்து இயக்கி அக்ச‌ய் குமார், ஐஸ்வர்யா ராய், நேகா தூபியா மற்றும் பலர் நடித்து ஹிந்தியில் வெளிவந்துள்ள படம்தான் ஆக்ச‌ன் ரீப்ளே.எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அப்பா அம்மாவைப் பார்த்து திருமணத்தை வெறுக்கிறான் ஒரு இளைஞன். அவ‌ர்க‌ள‌து திரும‌ண‌ம் தாத்தா பாட்டி வ‌ற்புறுத்த‌லின்பேரில் ந‌ட‌க்கிற‌து. பெற்றோர் திருமணம் காதல் திருமணமாய் இருந்திருந்தால் இந்த மாதிரி சண்டை போடாமல் இருப்பார்களே என நினைக்கிறான்.அவ‌னுடைய‌ காத‌லியின் தாத்தா க‌ண்டுபிடித்த‌ கால‌ எந்திர‌த்தின் உத‌வியால் த‌ன்னுடைய‌ பெற்றோரின் இற‌ந்த‌ கால‌த்துக்குள் நுளைகிறான். அத‌ன் பிற‌கு இற‌ந்த‌ கால‌த்தில் எவ்வாறு த‌ன‌து பெற்றோருக்கிடையில் காத‌லை உருவாக்குகிறான், இருவ‌ருக்குமிடையிலான‌ நெருக்க‌த்தை எவ்வாறு அதிக‌ரிக்கிறான் என்ப‌தே க‌தை.

நாய‌க‌னாக‌ ஆதித்யா ராய் க‌பூர் ம‌ற்றும் அவர‌து பெற்றோராக‌ அக்ச‌ய் குமார் ம‌ற்றும் ஐஸ்வர்யா ராய். ப‌ட‌த்தில் 1975க‌ளை காட்டும் காட்சிக‌ளில் இய‌க்குன‌ரின் மென‌க்கெட‌ல் தெரிகிற‌து ம‌ற்றும் அக்ச‌யின் ஓட்ட‌லில் வேலை செய்ப‌வ‌ராக‌ வ‌ரும் ராஜ்பால் யாத‌வ்‍‍‍‍‍‍‍‍-ன் காமெடி கொஞ்ச‌ம் ஆறுத‌ல்.அதைத் த‌விர‌ ப‌ட‌த்தில் சொல்லிக்கொள்ளும்ப‌டி ஒன்றும் இல்லை. லாஜிக் என்ப‌து சுத்த‌மாக‌ கிடையாது. இசையும் சுமார் ர‌க‌ம்தான்.

அக்ச‌ய் இத‌ற்காக‌ நீண்ட‌முடி வ‌ள‌ர்த்து த‌ன‌து ஹேர்ஸ்டைலை மாற்றி இருக்கிறார். அவ‌ரை இதில் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு கோமாளி போல‌ காட்டி இருக்கின்ற‌ன‌ர். அக்ச‌யை எப்போதும் க‌லாய்க்கும் கேர‌க்ட‌ரில் ஐஸ். ஐஸ்வர்யா ராய் ராவ‌ண‌ன் ம‌ற்றும் எந்திர‌னுக்கு அப்புற‌ம் இப்ப‌டி ஒரு ப‌ட‌மா?. எப்ப‌டி இந்த‌ ப‌ட‌த்திற்கு ஒப்புக்கொண்டார் என்றே விள‌ங்க‌வில்லை. ஐஸின் ந‌ண்ப‌ராக‌ வ‌ரும் ரான்விஜ‌ய் சிங்கின் ந‌டிப்பும் ர‌சிக்கும்ப‌டி இல்லை. நேகாவும் இதே ர‌க‌ம்தான்.


நாய‌க‌ன் வ‌ந்த‌ கால‌ எந்திர‌ம் 1975க்கு சென்ற‌வுட‌ன் சேத‌ம‌டைந்து விடுகிர‌து. பின்பு அவ‌ர் கால‌ எந்திர‌ம் க‌ண்டுபிடித்த‌வ‌ரை 35 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பே ச‌ந்திப்ப‌தாக‌வும், அவ‌ர் மாற்று இய‌ந்திர‌ம் க‌ண்டுபிடிப்ப‌தாக‌வும் அத‌ன் மூல‌ம் திரும்பி 2010க்கு வ‌ருவ‌தாக‌வும் இருப்ப‌து சுத்தாக‌ ஏற்றுக்கொள்ள‌ இய‌ல‌வில்லை. இவ்வாறு நிறைய‌ இட‌ங்க‌ளில் லாஜிக் உதைக்கிற‌து (எங்கேன்னு கேக்காதீங்க‌).

இய‌க்குன‌ர் விபுல் ஷாவைப் ப‌ற்றி இங்கே கண்டிப்பாக சொல்ல‌ வேண்டும் (ஏன்னா த‌யாரிச்ச‌ புண்ணிய‌வான் அவ‌ர்தானே). இவ‌ர் மின்ன‌லே ப‌ட‌த்தின் ரீமேக் ஆன‌ ரெஹ‌னா ஹை தேரே தில்மே ப‌ட‌த்தில் ரைட்ட‌ராக‌ ப‌ணிபுரிந்த‌வ‌ர். க‌ட‌ந்தாண்டு வெளிவ‌ந்த‌ ல‌ண்ட‌ன் ட்ரீம்ஸ் என்ற‌ ப‌ட‌த்தை இய‌க்கிய‌வ‌ர் (அம்ம‌ணி அசின், ச‌ல்மான் ம‌ற்றும் அஜ‌ய் தேவ்க‌ன் ஆகியோர் ந‌டித்த‌து). காக்க‌ காக்க‌ வின் ஹிந்தி ரீமேக் (ஜான் ஆப்ர‌காம் ம‌ற்றும் ஜெனிலியா) ம‌ற்றும் ஏ.ஆர்.முருக‌தாஸின் அடுத்த‌ ஹிந்தி ப‌ட‌ம் (அக்ச‌ய் குமார் ம‌ற்றும் அசின்) இர‌ண்டையும் த‌யாரிக்கிறார் என்ப‌து உப‌த‌க‌வ‌ல் (ந‌ல்ல‌வேளை இய‌க்க‌லை).

ஓர‌ள‌வு ந‌ல்ல‌ க‌தை, இன்னும் ந‌ன்றாக‌ உருவாக்கி இருக்க‌லாம். மொத்த‌த்தில் ஆக்ச‌ன் ரீப்ளே ஒரு பெருத்த‌ ஏமாற்ற‌ம் (என்ன‌ ப‌ண்ற‌து? விம‌ர்ச‌ன‌ம் எழுதி ம‌ன‌ச‌ தேத்திக்க‌ வேண்டிய‌துதான்). தீபாவ‌ளிக்கு வேற‌ ந‌ல்ல‌ப‌ட‌ம் ஏதும் ரிலீஸ் ஆகாத‌தால் (நாங்க‌ளும் அப்ப‌டிதானே போயி மாட்டிக்கிட்டோம்) ஓர‌ள‌வு வ‌சூல் எதிர்பார்க்க‌லாம் (வேறென்ன‌ போட்ட‌ காசுதான். ப‌ட்ஜெட் 40 கோடிங்க‌).

பி.கு : இப்ப‌டிக்கு மொக்க‌ப்ப‌ட‌த்த‌ தேடிப்போயி பார்த்து பின் புல‌ம்புவோர் ச‌ங்க‌ம்.

Thursday, November 4, 2010

தீப ஒளித் திருநாள்...


அனைவருக்கும்
என் உளம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இந்நாள் நம் அனைவர் வாழ்விலும் மட்டட்ற மகிழ்ச்சியை தரட்டும் என் வேண்டிக்கொள்கிறேன்.


என் அலுவலகத்தில் செய்யப்பட்ட தீபாவளி ஏற்பாடுகள் சில.பி.கு : நண்பர்கள் அனைவரும் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Monday, November 1, 2010

கேமரா ஆல்பம்.

நான் எனது மொபைல் கேமராவில் சுட்ட சில புகைப்படங்கள் இதோ உங்களின் பார்வைக்காக.


கடந்த விடுமுறையில் ஊர் சென்றிருந்தபோது தோட்டத்தில்அதே விடுமுறையில் ஊரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அருவிக்கு சென்றிருந்தபோது

கம்பெனியில் வேலைக்கு நடுவேஇப்போதைய வீட்டின் பால்கனியில் இருந்து