Pages

Thursday, December 31, 2009

புதுசு


எதுவாருந்தாலும் அது புதுசா இருந்தா அதோட மவுசே தனி தான்.


சின்ன பையனா இருந்த போது புது துணி, புது விளையாட்டு
ஸ்கூல்ல படிக்கும்போது புது பேனா, புது பேக், புது பென்சில்
காலேஜூல படிக்கும்போது புது கேர்ல்பிரண்டு, புது கிளாஸ்ரூம், புது பாடம்(படம்), புது லெக்சரர்
வேலைக்கு போனதுக்கு அப்புறம் புது பைக், புது கார், புது வீடு, புது பொண்டாட்டி

இப்படி வாழ்க்கையோட ஒவ்வொரு ஸ்டேஜுலயும் நாம சந்திக்கிற பல விசயங்கள் புதுசு தான். அப்படிப்பட்ட புதுசு எல்லாமே நமக்கு மாற்றத்தையும் சந்தோசத்தையும் தான் தந்திருக்கு.


அதே மாதிரி வரப்போற இந்த புது வருசமும் நமக்கு சந்தோசத்தையே தரும்னு எதிர்பார்க்கிறேன்.


இந்த வருசம் சந்தோசத்தை மட்டும் தராம புது நட்பு, வெற்றி, தோல்வி, கவலை, ஏமாற்றம், எதிர்பார்ப்பு, காதல், பாசம் என எல்லாம் கலந்த கலவையை கொடுக்கட்டும்னு கடவுளை வேண்டிக்கிறேன்.


கிடைக்கக்கூடிய வெற்றியானது தோல்விய விட குறைஞ்சது ஒரு சதவீதமாவது அதிகமா இருக்கட்டும்னு எதிர்பார்க்கிறேன்.
மற்றபடி உலகிலுள்ள எல்லா மக்களும் மிக மகிழ்ச்சியா இருக்க என் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன்.


அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


- அன்பரசன்.

Sunday, December 20, 2009

வியப்புஅதிகாலை சூரியன்
வயல்காடு
தென்னந்தோப்பு
அந்திப்பொழுது
பௌர்ணமி நிலவு
சிறு குழந்தை
இவையனைத்தையும்
ரசித்த போது
வராத கவிதை
அவள் முகம் பார்த்த
நொடிப்பொழுதில்
அருவிபோல்
வந்து விழுவதேன்?

- அன்பரசன்.

Thursday, December 10, 2009

வேண்டுதல்

எனது மாமா பெயர் முத்து. ஆனால் எல்லோரும் அவரை அப்பன் என்றே செல்லமாக அழைப்பதுண்டு. அவர் இருக்கும் இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும். அந்த அளவுக்கு ஜாலி பேர்வழி. எல்லோரிடமும் மிகவும் சகஜமாகவும் அன்பாகவும் பழகுவார்.எங்கள் ஊருக்குள் அவரை தெரியாதவர்களே கிடையாது. அந்த அளவிற்கு எல்லோருக்கும் பரிச்சயமானவர். சொல்லப்போனால் அவர் கேலி, கிண்டல் செய்யாத ஆட்களே ஊருக்குள் கிடையாது.

குழந்தைகளை அழ வைப்பது, பெரியவர்களை கண்டால் சட்டைப்பையில் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு திருப்பி தர மறுப்பது, ஒரு தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையை அதன் அம்மா முன்னாலேயே எடுத்து கொண்டு போய் அடுத்த தெருவில் விட்டு வருவது, பரிட்சைக்கு போகும் சிறுவர்களின் பரிட்சை அட்டையை பிடுங்கிக்கொண்டு தர மறுப்பது, அமைதியாக செல்பவரை எந்த காரணமும் இன்றி சிறிது தூரம் துரத்துவது என அவர் செய்யும் சேட்டைகள் ஏராளம்.மொத்தத்தில் அவர் செய்யும் குறும்புகள் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு சென்றிருந்த போது அவரை சந்தித்தேன்.வழக்கமாக சகஜமாக பேசுபவர் இம்முறை நானாக சென்று பேசியும் சரியாக பேசவில்லை. அவரிடம் வழக்கமாக இருக்கும் கலகலப்பு இம்முறை இல்லை.பின்பு நண்பர்களிடம் விசாரித்ததில் தெரிந்தது அவருக்கு ஏழு மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டத்தில் இவ்வாறு ஆனது என்று.ஒரு வாகனம் மோதியதில் அவரது நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு பல வார சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி இருக்கிறார்.

சிகிச்சை முடிந்த பிறகும் கூட அவர் பழைய நிலைக்கு திரும்பவில்லை.எதற்கெடுத்தாலும் கோபப்படுவது, அடிக்கடி வீட்டில் சண்டையிடுவது, எப்போதும் எதையோ பறிகொடுத்தவர் போல் இருப்பது என அவரது நடவடிக்கைகள் நேரெதிராக மாறிவிட்டன.உறவினர்கள், நண்பர்கள் எவ்வளவோ முயன்றும் அவரது இந்த நடவடிக்கைகளை மாற்ற முடியவில்லை.

மிக நல்ல குணம் கொண்ட ஒரு மனிதர் இவ்வாறு இருப்பதை என்னால் தாங்க முடியவில்லை.அவர் திரும்பவும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். அவரது பழைய சுறுசுறுப்பு, கலகலப்பு, மகிழ்ச்சி அனைத்தையும் அவர் திரும்ப பெற வேண்டும்.எனது இந்த கோரிக்கையை மட்டும் நிறைவேற்றும் படி ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

Saturday, December 5, 2009

அம்மாசுழலும் நாற்காலி
பளபளக்கும் மேஜை
பளிங்கு தரை
வண்ண திரைச்சீலை
ஆர்டர் கேட்க பவ்யமாய் சர்வர்
விதவிதமாய் உணவு வகைகள்
கை நிறைய பணம்
இத்தனையும் இருந்தும்
மனம் ஏங்குகிறது
"கண்ணு பழைய சோத்துல தண்ணி
ஊத்தி வச்சிருக்கேன்.
தயிர ஊத்தி ஒரு வாய் சாப்பிட்டு போடா"
என்ற அம்மாவின் காலை நேர குரலுக்காக...


- அன்பரசன்

Friday, November 27, 2009

நினைவும் நிஜமும்


பூக்களை ரசித்த தருணங்களில்
உன் புன்னகையால் நினைவூட்டினாய்!
தேன் உண்ணும் போதெல்லாம்
உன் குரலால் நினைவூட்டினாய்!
முத்துக்களை பார்த்த போதெல்லாம்
உன் பற்களால் நினைவூட்டினாய்!
இசையை ரசித்த பொழுதுகளில்
உன் கொலுசொலியால் நினைவூட்டினாய்!
கடவுளை தரிசித்த வேளைகளில்
உன் காந்த புன்னகையால் நினைவூட்டினாய்!
இப்படி எல்லாவற்றிலும்
என் நினைவோடு கலந்த நீ,
ஏன்
என் நிஜத்தோடு
கலக்க மறுக்கிறாய் ?

- அன்பரசன்

Sunday, November 8, 2009

மொபைலும் நானும்

எனக்கு ஸ்கூல்ல படிக்கிற வயசுல இருந்தே மொபைல் போன் மேல ஒரு அலாதி பிரியம். அப்போ எங்க ஊரிலேயே ஒரு பத்து பேர் கிட்ட தான் மொபைல் இருக்கும். அதிலும் எங்க தெருவுல ரெண்டு பேர் கிட்ட மட்டும் தான் இருக்கும். அவங்கள பார்க்கும் போதெல்லாம் பார்வை தானா மொபைலுக்கு தான் போகும்.அவங்க ரெண்டு பேருமே வயசுல மூத்தவங்க. அதனால கொடுங்க பார்க்கலாம்னு கேட்க முடியல. தூரத்தில் இருந்து பார்த்து ஏக்ககப்பட்டுட்டே இருப்பேன்.

அப்புறம் நான் காலேஜ் சேர்ந்தவுடன் ஆர்வம் இன்னும் அதிகமாச்சு. அப்போ மொபைல் நல்லா பரவ ஆரம்பிச்ச காலம். கல்லூரி நண்பர்கள், ஊரில் உள்ள நண்பர்கள் என நிறைய பேரு வச்சிருந்தாங்க. அதனால யார் மொபைல் வச்சிருந்தாலும் அது என்ன மாடல், என்ன விலை, அதில் என்ன வசதிகள் உள்ளன என ஆராய்ச்சி செய்துகிட்டு இருந்தேன்.

கல்லூரி இறுதியாண்டில் கேம்பஸ் இண்டர்வியூ-ல தேர்வானேன். கடைசி செமஸ்டரின் போது நண்பன் ஒருவன் தன்னோட மொபைல விக்கிறதா சொன்னான். உடனே வீட்டில பேசி மிகுந்த சிரமத்துக்கு நடுவுல Nokia கம்பெனியோட 1100 மாடல் போன் வாங்கினேன்.(வீட்டில சம்மதம் மற்றும் பணம் வாங்க பட்ட கஸ்டம் இருக்கே. அது ஒரு தனி கதைங்க). ஒரு வழியா என்னோட பல வருச எதிர்பார்ப்பு நிறைவேறுச்சுன்னு சொல்லலாம்.

மொபைல் வாங்கினதில இருந்து ஒரு ரெண்டர மாசம் எந்நேரமும் கைல வச்சிட்டே சுத்திக்கிட்டு இருந்தேன். தினமும் ஆயிரக்கணக்கில் மெஸேஜ் அனுப்பிட்டிருந்தேன். அப்புறம் வேலைக்கு சேர்ந்தப்புறம் மொபைல் மோகம் வேற மாதிரி ஆரம்பிச்சுது.(வேலை செய்யுற இடம் அப்படி. என்ன சுத்தி இருந்த எல்லாருமே குறைந்தது ஒரு கேமரா மொபைல் வச்சிருந்தாங்க.) நானும் ரெண்டு வருசமா மாத்தணும்னு நினைச்சு பல பிரச்சினைகளால (வேறென்ன பொருளாதாரம் தான்) வாங்க முடியாம போச்சு.

பிறகு ஒரு வழியா கஷ்டப்பட்டு போன மே மாசம் Sony ericsson கம்பனியோட K810! மாடல வாங்கினேன். இவ்வளவு சிரமப்பட்டு வாங்கின மொபைல பாதுகாக்கிற வேலை இருக்கே அது ஒரு பெரும்பாடு. முன்னல்லாம் 1100 வச்சிருந்தப்ப நான் மழை, வெயில் எதுக்குமே கவலைப்பட்டதில்லை. இப்பல்லாம் எங்கு போனாலும் வந்தாலும் அடிக்கடி பாக்கெட்ட தொட்டு தொட்டு பார்க்க வேண்டியிருக்கு.

ஒரு காலத்திலே வாங்க மாட்டோமா என ஏங்கிய நிலை போய் இன்று மொபைல் இல்லாம ஒரு நாள் கூட இருக்க முடியாது என்ற நிலை வந்து விட்டது. அப்புறந்தாங்க புரிஞ்சது எதுவே அளவோடு இருந்தா எந்த பிரச்சனையும் கிடையாது. அதிகமா இருந்தா அத பாதுகாக்கிறதே ஒரு பிரச்னை ஆயிடும்.

பின் குறிப்பு : நேத்து ரூம்ல மொபைல பார்த்த போது தோணுச்சு. அதான் இப்படி ஒரு ப்ளாஷ்பேக்.

Wednesday, October 7, 2009

நிஜப்பெயர்

தமிழ் சினிமா உலகில் பிரபலமான பலர் தங்களது நிஜப்பெயரை பயன்படுத்தவில்லை
சினிமாவிற்க்காக தனது பெயரை மாற்றிய பிரபலங்கள் சிலரது நிஜப்பெயர்கள் கீழே.


இளையராஜா - ராசய்யா
ஏ.ஆர் ரஹ்மான் - திலீப் குமார்
ரஜினிகாந்த் - சிவாஜிராவ்
விஜயகாந்த் - விஜயராஜ்
சூர்யா - சரவணன்
தனுஷ் - பிரபு
தேவயானி - சுஷ்மா
ரம்பா - விஜயலக்ஷ்மி
சினேகா - சுஹாசினி
சத்யராஜ் - ரங்கராஜ்
கார்த்திக் - முரளி
ராதா - விஜய சந்திரிகா
ரேவதி - ஆஷா கேழுண்னி குட்டி
நயன்தாரா - டயானா மரியம் குரியன்
விக்ரம் - ஜான் கென்னடி
ஷ்யாம் - சம்சுதீன் இப்ராஹிம்
ஆர்யா - ஜம்ஸத் சேத்திரகாத்
நக்மா - நம்ரதா சாதனா

Friday, October 2, 2009

சிந்தனை துளிகள்

முதலில் வணங்க வேண்டிய தெய்வம் - தாய் , தந்தை
மிகவும் மதிக்க வேண்டியவர் - குரு
மிக மிக நல்ல நாள் - இன்று
மிகப்பெரிய வெகுமதி - மன்னிப்பு
மிகவும் வேண்டியது - பணிவு
மிகவும் வேண்டாதது - வெறுப்பு
மிகப்பெரிய தேவை - நம்பிக்கை
மிகக் கொடிய நோய் - பேராசை
மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
கீழ்த்தரமான விஷயம் - பொறாமை
நம்பக் கூடாதது - வதந்தி
ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
செய்ய கூடாதது - நம்பிக்கை துரோகம்
செய்யக் கூடியது - உதவி
விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி - உழைப்பு
நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு
பிரியக் கூடாதது - உண்மை நட்பு
மறக்க கூடாதது - நன்றி

Sunday, September 13, 2009

ப.பி கவிதைகள்

நான் படித்து ரசித்த கவிதைகள் சில உங்களுக்காக..

நோக்கல்
அண்ணலும் நோக்கினேன்
அவளும் நோக்கினாள்
இடையில்
அவள் அண்ணனும் நோக்கினான்
ஹாஸ்பிடலில் நான்!!!

பாதிப்பு
எதார்த்தமாக
பார்க்கையில்
எவ்வித பாதிப்பும் இல்லை.
கண்களை சுருக்கி
பார்த்த போது கூட
கவனம் சிதறவில்லை.
ஓரப்பார்வையில்
பார்த்த போது கூட
ஓரளவு தான்
பாதிப்பு தெரிந்தது.
ஆனால்
நீ பார்க்காமல்
போனபோது தான்
பாவி மனம்
என்ன பாடு படுகிறது....

சிரிப்பு
என்னை பார்த்து
அவள் சிரித்தாள்..
அவளை பார்த்து
நான் சிரித்தேன்..
எங்களிருவரையும் பார்த்து
ஊரே சிரித்தது!!!!

இவை எல்லாம் எங்கேயோ எதிலோ படித்தவை.

Wednesday, September 9, 2009

ரோஜா, முள்

பெண்ணே
உன்னை ரோஜா என நினைத்தேன்.
உனது மென்மையை பார்த்து...
ஆனால்,
நீயோ
உனது வன்மையை காட்டி விட்டாய்
என்னை முள்ளாக குத்தியதில் இருந்து...
- அன்பரசன்

Sunday, September 6, 2009

பொன்மொழிகள் சில

சமீபத்தில் அர்த்தமுள்ள இந்துமதம் நான்காம் பாகம்(துன்பங்களிலிருந்து விடுதலை) படிக்க நேர்ந்தது.

அதில் எனக்கு பிடித்தவை சில உங்களுக்காக...


* ஓவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது மரணத்தை பற்றி சிந்திக்கிறான்.
* தயிரும் கீரையும் இரவில் தவிர்ப்பது நல்லது.
* வறுமையை விட சிறந்த பள்ளிக்கூடம் எதுவும் கிடையாது.
* இளம் வயதில் இருந்து மரண காலம் வரை ஒருவன் நடந்து கொண்டே திரிந்தால் பெரும்பாலான நோய்கள் போய்விடும்.
* இன்பமும் துன்பமும் நேரத்தையும் சூழ்நிலையையும் பொறுத்தவை.
* நம் நாட்டில் பெரும்பாலான பெரிய மனிதர்கள் மனிதாபிமானம் இல்லாதவர்கள்.
* பகைவனே இல்லாமல் இருப்பது எப்படி?
சில விசயங்களை ஜீரணிக்க வேண்டும்.
சில விசயங்களை அலட்சியப்படுத்த வேண்டும்.
* ஆத்திரமூட்டும் கேள்விகளை அலட்சியமாக சமாளித்தால் பகைவனே நண்பனாகி விடுவான்.
* இனமும் குணமும் தான் முக்கியமே தவிர பணம் அல்ல.
* ரத்தத்தில் இருக்கும் மின்சார வேகம் செல்வத்திலோ , செல்வாக்கிலோ இல்லை.
* உனக்கு கீழே உள்ளவர் ஒரு கோடி , நினைத்து பார்த்து நிம்மதி தேடு.
* 'துன்பத்திலெல்லாம் குறைந்த பட்ச துன்பம் நமக்கு வந்தது தான் ' என கருதினால் எந்த துன்பமும் துன்பமாக இருக்காது.
* யாராவது தாறுமாறாக பேசினால் நீங்கள் சொல்வதே சரி என்று சொல்லுங்கள்.
* வருகின்ற துன்பங்களை எல்லாம் ஒன்று,இரண்டு,மூன்று என அனுபவங்களாக சேகரித்து கொள்ளுங்கள்.
* புதுப்புது அனுபவமாக சேகரியுங்கள் . ஒரே அனுபவத்திற்கு இரண்டு , மூன்று என மதிப்பு போடாதீர்கள்.


பின்குறிப்பு : ரூம்ல பொழுது போகம இருந்தபோது நண்பர் ஒருவர் இந்த புத்தகத்தை படிக்க சொல்லி கொடுத்தார். அதன் விளைவு தான் இது. நான் மட்டுமே இதற்க்கெல்லாம் காரணம் இல்லீங்கோ.

Thursday, September 3, 2009

ஆசை


வசித்திட ஆசை!
தாய் தந்தையோடு
அதே பழைய ஓட்டு வீட்டில்....
பருகிட ஆசை!
அதிகாலையில்
சகோதரி தரும் தேனீரை...
ருசித்திட ஆசை!
அம்மா கையால் சமைத்த
அறுசுவை உணவை...
திளைத்திட ஆசை!
குடும்பத்தாரின்
பாசம் மற்றும் பரிவினில்...
உழைத்திட ஆசை!
வியர்வை சிந்த
சொந்த நிலத்தினில்...
சுற்றிவர ஆசை!
சொந்த ஊரை
பழைய நண்பர்களோடு...
உறங்கிட ஆசை!
நிம்மதியாய்
எனது பழைய கயிற்று கட்டிலில்...
கிடைத்திட ஆசை!
விரைவினில்
இவை அனைத்தும்...

-
அன்பரசன்

Sunday, August 30, 2009

மேக‌ம்


த‌ண்ணீர் ப‌டையின்
க‌ருவ‌றை..
மின்ன‌ல் பாம்புக‌ள்
குடியிருக்கும்
புற்று..
நில‌வு ம‌க‌ள்
க‌டைந்தூற்றிய‌
மோர்க்குட்டை..
மேக‌மே
அழுவ‌து அவ‌ல‌ம‌ல்ல‌..
அழு.
நீ
அழ‌வில்லையென்றால்
நாங்க‌ள்
சிரிப்ப‌தெப்ப‌டி!!!!

- அன்ப‌ர‌ச‌ன்.