Pages

Sunday, December 26, 2010

தட்கல் டிக்கெட்...

போன தடவ ஊருக்கு போயிருந்தப்ப அவசரமாக கிளம்புனதுல ரிடர்ன் டிக்கெட் எடுக்க முடியல. தட்கல் இருக்குல்ல பாத்துக்கலாம்னு நினைச்சு நானும் விட்டுட்டேன்.

ஊரிலிருந்து திரும்ப டிக்கெட்(தட்கல்) எடுக்க ரயில்வே ஸ்டேசன் போயிருந்தப்ப மணி ஏழு நாப்பது ஆயிருந்துச்சு. கவுன்ட்டர் திறக்க இருபது நிமிசம் ஆகுங்கிரதால போயி வரிசையில இடம் புடிச்சேன். ஏழாவது ஆளாக இடம் கெடச்சுது. எப்போதும் காலியாகக் கிடக்கும் ரிசர்வேசன் கவுன்ட்டர் அப்போ நிரம்பி வழிஞ்சுது.பக்கத்துல இருந்தவர கிளர்னதுல நிறையபேர் கோடை விடுமுறைக்கு வெளியூரிலிருந்து வந்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் இப்போ திரும்பி போவதலுமே இவ்வளவு கூட்டம்னும் தெரிய வந்தது (விவரமான பயபுள்ளதான்).

ஒரு ஏழு அம்பது இருக்கும்போது பத்து பதினஞ்சு பேர் திடுதிடுன்னு வந்து ஒரு எடத்துல அடுக்கி வச்சிருந்த பேப்பர்ல சிலத எடுத்துட்டு இடையில வந்தாங்க.. நாம விடுவமா? ஏங்க நாங்கல்லாம் நிக்கிறது தெரியலையா பின்னாடி போயி நில்லுங்க என்றேன். உடனே அந்த க்ரூப்ல இருந்த ஒரு ஆள் தம்பி இதெல்லாம் நேத்து சாயந்தரமே ஃபில் பண்ணி வரிசை நம்பர் போட்டு வச்ச ஃபார்ம் (என்னா ஒரு வில்லத்தனம்?). ஆமா உங்க நம்பர் என்ன என்றார். நானோ அப்பாவியாய் 'இல்லங்க நான் இப்பதான் வந்தேங்க' என்றேன்.வரிசைல பின்னாடி போயி நில்லுங்க அப்படின்னு சொல்லிட்டே இடையில வந்துட்டார். உடனே முன்னாடி நின்றிருந்தவங்க சிலர் எதிர்ப்பு தெரிவிச்சு வரிசைல பின்வாங்க மறுத்தாங்க.

பின் ஒரு பெரிய சலசலப்புக்கு அப்புறம் எல்லாரும் சேர்ந்து நேத்து வச்சுட்டு போனவங்கதான் முன்னாடி நிக்கணும், இன்னிக்கு வந்தவங்க எல்லாம் வந்த நேரத்து அடிப்படையில நிக்கணும்னு முடிவு பண்ணினோம் (பண்ணினோம் இல்ல பண்ணினாங்க. ஏன்னா மெஜாரிட்டி அவங்க பக்கம்தான்). அப்படி நின்னதுல எனக்கு பத்தொன்பதாவது இடம் கிடைச்சது. சரி வேற என்ன பண்ணன்னு அப்படியே போனேன். ஒரு வழியா கவுன்ட்டர தொட்டு டிக்கெட் கேட்டா தட்கால் வெயிட்டிங் 117 புக் பண்ணவான்னு கேக்குறாரு.

நான் உடனே வேண்டாம்னு சொல்லிட்டு திரும்பிட்டேன். அவர் நாளைக்காவது முதல் பத்துக்குள்ள வாப்பா அப்பதான் இந்த ரயில்ல கெடைக்கும்னு சொன்னார்.நாளைக்கு டிக்கெட்னா இன்னும் ஒருநாள் லீவு போடனுமேன்னு கடுப்புல வீட்டுக்கு போனேன். ஆனா அன்னைக்கு சாயந்தரம் போயி ஒரு ஃபார்ம் ஃபில் பண்ணிட்டு நம்பர் போடலாம்னு பார்த்தா ஏற்கனவே ரெண்டு ஃபார்ம் இருக்கு (இவனுங்கல்லாம் தூங்குரதே இங்கதான் போல).

பிறகு எனக்கு மூணாவது நம்பர போட்டு வச்சுட்டு திரும்பினேன். மறுநாள் காலை கொஞ்ச விவரமா ஆறரை மணிக்கே போயிட்டேன் (விவரம்ல). அங்க அப்பவே பதினஞ்சு பேர் நின்னுட்டு இருக்காங்க.நானும் நம்ம நம்பர்தான் மூணு ஆச்சேன்னு சந்தோசமா இருந்தேன். ஆனா பாருங்க ஒரு ஏழரை மணி இருக்கும்போதுதான் அந்த ஏழரை ஆரம்பிச்சுது. அங்க இருந்தவங்க எல்லாரும் சேந்து ஒரு புது ரூல்ஸ் உருவாக்கினாங்க (????).

அது என்னானா இன்னிக்கு யார் மொதல்ல வந்தங்களோ அவங்கதான் மொதல்ல நிக்கனும், மத்தபடி நேத்து வந்து வச்சுட்டு போனதெல்லாம் செல்லாது (என்னமா ஏமாத்துறானுவ). எனக்கும் என்னை போலே நேத்து வச்சுட்டு போனவங்களுக்கும் வந்ததே கோபம். என்னங்க தினம் ஒருமாதிரி பண்ணா எப்படிங்கன்னு கேக்க அதுக்கு ஒருத்தர் சொன்ன பதில் இதோ "தம்பி நான் நைட் 2 மணில இருந்தே இங்கதான் இருக்கேன். காலைல வந்துட்டு பேச்சபாரு. போப்பா போயி பின்னாடி நில்லு" (அங்கயே குடியிருப்பாங்க போல).

அப்பறம் பெரிய சலசலப்புக்கு அப்புறம் அவரவர் உடல் வலிமைக்கு தகுந்த மாதிரி வரிசைல நின்னுட்டாங்க. அதுல எனக்கு 21ஆவது இடம் கெடச்சுது (நம்ம ரோமப் ஸ்ட்ராங்ல. அதான்).

டிக்கெட் கிடைக்காதுன்னு அப்பவே தெரியும். இருந்தாலும் ஒரு நப்பாசைல வரிசைல போயி கவுன்ட்டர்ல நின்னா ரிக்ரெட்டடு-னு சொல்றாங்க. டிக்கெட்டும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்னு செம கடுப்புல வெளில வரைல பக்கத்துல நின்னுட்டுருந்த ஒருத்தர் மொபைல்ல இருந்து"ஹஹா... ஹஹா.... ஐ ம் ஹேப்பி..... ஸ்டார்ட் ம்யூஸிக்".

Saturday, December 18, 2010

கடுங்குளிர்

அதிகாலை 03:30 மணி.
வெட்பம் 3°C.

டெல்லியின் மத்தியில் உள்ள ஒரு குருகிய தெரு. இருள் சூழ்ந்து அடர்த்தியாய் இருந்தது. சுற்றுப்புறத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் கடுங்குளிர் ஆட்கொண்டிருந்தது. பகல் முழுதும் ஆள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசலோடு இரைச்சலாய் இருக்கும் அத்தெரு தற்சமயம் மிக நிசப்தமாய் இருந்தது. அந்த தெருவில் மொத்தம் நான்கே பேர்.

ஒருவன் விளக்குக் கம்பத்திற்கு கீழே நின்று யாருடனோ தொ(ல்)லைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். தனது உடலை பருத்த கோட்டினால் மறைத்திருந்தான். மேலும் இருவர் தெருவோர சாக்கடைக்கு அருகே ஓரிடத்தில் பழைய பேப்பர் மற்றும் சிறுகுச்சிகளை வைத்து தீ மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தனர். இன்னும் ஒருவனோ தெருவின் எதிர்மூலையில் தனியே அமர்ந்திருந்தான். தன்னிடம் இருந்த சிறுதுணியின் உதவியால் உடலை மறைக்க முயன்று கொண்டிருந்தான்.

அப்போதுதான் அந்த சப்தம் கேட்டது. சப்தம் என்பதை விட அலறல் என்றே சொல்லலாம். அதுவும் ஒரு இளம்பெண்ணின் குரலில். உடனே முதலாமவன் சப்தம் வந்ததிசை நோக்கிப் பாய்ந்தான். பக்கத்தில் உள்ள குறுகிய சந்தில் போய்ப் பார்த்ததில், ஒரு பத்தொன்பது வயதுப்பெண் அசையாமல் நின்றிருந்தாள். அவளருகே ஒரு நாய்க்குட்டி நின்றிருக்க அவளோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

நாயை விரட்டி விட்டபின் திரும்ப எத்தனிக்கையில் பின்னாலிருந்து ஒரு குரல் " பஹுத் தன்யவாத் பையா" (மிக்க நன்றி அண்ணா) அவளேதான். அவனோ "சலேகா பெஹன். ஜாக்கே சோஜா" (பரவாயில்லை சகோதரி. போய்த்தூங்கு) என்றான்.

பின் சிறு புன்முறுவலுடன் மெல்ல நடந்தவாறே தனது தெருவுக்கு திரும்பினான். அங்கே அவன் கண்ட காட்சியோ வேறுவிதமாய் இருந்தது. முன்பிருந்த அதே மூன்று பேர். ஆனால் தீ அணைந்து விட்டிருந்தது. குளிர் காய்ந்துகொண்டிருந்த இருவரும் நடுநடுங்கி கொண்டிருந்தனர். கடுங்குளிர் என்பதால் அவர்களது உடம்பின் ஒவ்வொரு அங்குலத்திலும் குளிர் ஊடுருவி இருந்தது. இருவரின் நடுக்கத்தையும் பார்க்கவே என்னவோ செய்தது இவனுக்கு.முடிவு : குளிர்காலம்னு இருந்தா அதில சிலபேர் நடுங்கத்தான் செய்வாங்க. அதுக்கு நாம என்னங்க பண்ண முடியும்???.

பி.கு :
1)ஒன்னுல்ல. இங்க கொஞ்சநாளாவே குளிர் ரொம்ப அதிகம். அதான் இந்தமாதிரில்லாம்.
2)கதைன்னு நெனச்சு படிச்சு ஏமாந்திருந்தா கம்பெனி பொறுப்பாகாது.

Saturday, December 11, 2010

என்னவள்

சிணுங்கல்

செல்லமாய் சிணுங்காதே
இன்னொரு முறை...
ரிங்டோனோ என
அடிக்கடி தொட்டுப்பார்க்கிறேன்
என் மொபைல்போனை...

முகப்பரு

எத்தனை முறை வேண்டுமானாலும்
அடைக்கலம் தருகிறேன்
என் முகத்தில்
வந்துவிடு என்னிடம்...
என்னவள் பாவம்
பால் போன்ற அவள் முகத்தை
பாழாக்காதே!!

Tuesday, December 7, 2010

இருதுளி


நானும் உங்களைப்போல்
நேர்நடை நடந்திருப்பேன்
ஓடியாடி மகிழ்ந்திருப்பேன்
பிறரை சாராமல் இருந்திருப்பேன்
தனியே ஒதுக்கப்படாமல் இருந்திருப்பேன்
என் நட்புவட்டமும் விரிந்திரிக்கும்
உலக அனுபவம் கிடைத்திருக்கும்
குறைந்தது வாழவாவது செய்திருப்பேன்
எனக்கும் இருதுளி கிடைத்திருந்தால்....

Saturday, December 4, 2010

எடக்குமடக்கு...

உன்னைத் தவிர
எல்லோரும் என் சகோதரியே
என்றேன்
ஏன் என்றாய்
என் உயிரை எடுக்க
நீ ஒருத்தி போதாதா?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்றும் வழக்கம்போல்
என்னை எழுப்பி காப்பி தந்தாய்
ஆயினும் ஏதோ ஒரு
இனம் புரியாத மாற்றம் என்னில்
மிகுந்த யோசனைக்கிடையில்
கேட்டேன் 'நீ பல்லு வெளக்கினியா?'
படீரென இறங்கியது
உன் கையிலிருந்த தட்டு.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நேற்று உன்னிடம்
அப்படி கேட்டிருக்க கூடாது!
தடபுடவென சத்தம்
சமையலறையில் இருந்து...
'என்னடி அங்க சத்தம்
அமைதியா பண்ண முடியாதா' என்றேன்.
இன்று பேண்டேஜோடு நான்!!!
இருந்தாலும்
அப்படி கேட்டிருக்க கூடாது!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு புத்திசாலி மனிதன் என்பவன் சில முக்கியமான் முடிவுகளை எடுக்கும்போது முதலில் கண்களை மூடி, நன்றாக யோசித்து, மனசு சொல்றபடி கேட்டு பின்பு இறுதியாக அவன் மனைவி சொல்வதை செய்வான்.


பி.கு : மக்கா அதனால நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லைனு நெனைக்கிறேன். புரிஞ்சு நடந்துக்கோங்க பொழச்சுக்கோங்க.

Wednesday, December 1, 2010

கவிதை ரெண்டு.

அறை

ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறுகன்னம் காட்டு
என்றர் மூத்தோர்
இரு கன்னங்களையும்
மாறிமாறி காட்டத்தயார்
அறைவது நீயென்றால்...

முத்தம்

மீண்டும் குழந்தையாய்
மாறத் தூண்டியது
நேற்று நீ அருகாமை வீட்டு
குழந்தைக்கிட்ட முத்தம்.