Pages

Sunday, December 26, 2010

தட்கல் டிக்கெட்...

போன தடவ ஊருக்கு போயிருந்தப்ப அவசரமாக கிளம்புனதுல ரிடர்ன் டிக்கெட் எடுக்க முடியல. தட்கல் இருக்குல்ல பாத்துக்கலாம்னு நினைச்சு நானும் விட்டுட்டேன்.

ஊரிலிருந்து திரும்ப டிக்கெட்(தட்கல்) எடுக்க ரயில்வே ஸ்டேசன் போயிருந்தப்ப மணி ஏழு நாப்பது ஆயிருந்துச்சு. கவுன்ட்டர் திறக்க இருபது நிமிசம் ஆகுங்கிரதால போயி வரிசையில இடம் புடிச்சேன். ஏழாவது ஆளாக இடம் கெடச்சுது. எப்போதும் காலியாகக் கிடக்கும் ரிசர்வேசன் கவுன்ட்டர் அப்போ நிரம்பி வழிஞ்சுது.பக்கத்துல இருந்தவர கிளர்னதுல நிறையபேர் கோடை விடுமுறைக்கு வெளியூரிலிருந்து வந்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் இப்போ திரும்பி போவதலுமே இவ்வளவு கூட்டம்னும் தெரிய வந்தது (விவரமான பயபுள்ளதான்).

ஒரு ஏழு அம்பது இருக்கும்போது பத்து பதினஞ்சு பேர் திடுதிடுன்னு வந்து ஒரு எடத்துல அடுக்கி வச்சிருந்த பேப்பர்ல சிலத எடுத்துட்டு இடையில வந்தாங்க.. நாம விடுவமா? ஏங்க நாங்கல்லாம் நிக்கிறது தெரியலையா பின்னாடி போயி நில்லுங்க என்றேன். உடனே அந்த க்ரூப்ல இருந்த ஒரு ஆள் தம்பி இதெல்லாம் நேத்து சாயந்தரமே ஃபில் பண்ணி வரிசை நம்பர் போட்டு வச்ச ஃபார்ம் (என்னா ஒரு வில்லத்தனம்?). ஆமா உங்க நம்பர் என்ன என்றார். நானோ அப்பாவியாய் 'இல்லங்க நான் இப்பதான் வந்தேங்க' என்றேன்.வரிசைல பின்னாடி போயி நில்லுங்க அப்படின்னு சொல்லிட்டே இடையில வந்துட்டார். உடனே முன்னாடி நின்றிருந்தவங்க சிலர் எதிர்ப்பு தெரிவிச்சு வரிசைல பின்வாங்க மறுத்தாங்க.

பின் ஒரு பெரிய சலசலப்புக்கு அப்புறம் எல்லாரும் சேர்ந்து நேத்து வச்சுட்டு போனவங்கதான் முன்னாடி நிக்கணும், இன்னிக்கு வந்தவங்க எல்லாம் வந்த நேரத்து அடிப்படையில நிக்கணும்னு முடிவு பண்ணினோம் (பண்ணினோம் இல்ல பண்ணினாங்க. ஏன்னா மெஜாரிட்டி அவங்க பக்கம்தான்). அப்படி நின்னதுல எனக்கு பத்தொன்பதாவது இடம் கிடைச்சது. சரி வேற என்ன பண்ணன்னு அப்படியே போனேன். ஒரு வழியா கவுன்ட்டர தொட்டு டிக்கெட் கேட்டா தட்கால் வெயிட்டிங் 117 புக் பண்ணவான்னு கேக்குறாரு.

நான் உடனே வேண்டாம்னு சொல்லிட்டு திரும்பிட்டேன். அவர் நாளைக்காவது முதல் பத்துக்குள்ள வாப்பா அப்பதான் இந்த ரயில்ல கெடைக்கும்னு சொன்னார்.நாளைக்கு டிக்கெட்னா இன்னும் ஒருநாள் லீவு போடனுமேன்னு கடுப்புல வீட்டுக்கு போனேன். ஆனா அன்னைக்கு சாயந்தரம் போயி ஒரு ஃபார்ம் ஃபில் பண்ணிட்டு நம்பர் போடலாம்னு பார்த்தா ஏற்கனவே ரெண்டு ஃபார்ம் இருக்கு (இவனுங்கல்லாம் தூங்குரதே இங்கதான் போல).

பிறகு எனக்கு மூணாவது நம்பர போட்டு வச்சுட்டு திரும்பினேன். மறுநாள் காலை கொஞ்ச விவரமா ஆறரை மணிக்கே போயிட்டேன் (விவரம்ல). அங்க அப்பவே பதினஞ்சு பேர் நின்னுட்டு இருக்காங்க.நானும் நம்ம நம்பர்தான் மூணு ஆச்சேன்னு சந்தோசமா இருந்தேன். ஆனா பாருங்க ஒரு ஏழரை மணி இருக்கும்போதுதான் அந்த ஏழரை ஆரம்பிச்சுது. அங்க இருந்தவங்க எல்லாரும் சேந்து ஒரு புது ரூல்ஸ் உருவாக்கினாங்க (????).

அது என்னானா இன்னிக்கு யார் மொதல்ல வந்தங்களோ அவங்கதான் மொதல்ல நிக்கனும், மத்தபடி நேத்து வந்து வச்சுட்டு போனதெல்லாம் செல்லாது (என்னமா ஏமாத்துறானுவ). எனக்கும் என்னை போலே நேத்து வச்சுட்டு போனவங்களுக்கும் வந்ததே கோபம். என்னங்க தினம் ஒருமாதிரி பண்ணா எப்படிங்கன்னு கேக்க அதுக்கு ஒருத்தர் சொன்ன பதில் இதோ "தம்பி நான் நைட் 2 மணில இருந்தே இங்கதான் இருக்கேன். காலைல வந்துட்டு பேச்சபாரு. போப்பா போயி பின்னாடி நில்லு" (அங்கயே குடியிருப்பாங்க போல).

அப்பறம் பெரிய சலசலப்புக்கு அப்புறம் அவரவர் உடல் வலிமைக்கு தகுந்த மாதிரி வரிசைல நின்னுட்டாங்க. அதுல எனக்கு 21ஆவது இடம் கெடச்சுது (நம்ம ரோமப் ஸ்ட்ராங்ல. அதான்).

டிக்கெட் கிடைக்காதுன்னு அப்பவே தெரியும். இருந்தாலும் ஒரு நப்பாசைல வரிசைல போயி கவுன்ட்டர்ல நின்னா ரிக்ரெட்டடு-னு சொல்றாங்க. டிக்கெட்டும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்னு செம கடுப்புல வெளில வரைல பக்கத்துல நின்னுட்டுருந்த ஒருத்தர் மொபைல்ல இருந்து"ஹஹா... ஹஹா.... ஐ ம் ஹேப்பி..... ஸ்டார்ட் ம்யூஸிக்".

Saturday, December 18, 2010

கடுங்குளிர்

அதிகாலை 03:30 மணி.
வெட்பம் 3°C.

டெல்லியின் மத்தியில் உள்ள ஒரு குருகிய தெரு. இருள் சூழ்ந்து அடர்த்தியாய் இருந்தது. சுற்றுப்புறத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் கடுங்குளிர் ஆட்கொண்டிருந்தது. பகல் முழுதும் ஆள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசலோடு இரைச்சலாய் இருக்கும் அத்தெரு தற்சமயம் மிக நிசப்தமாய் இருந்தது. அந்த தெருவில் மொத்தம் நான்கே பேர்.

ஒருவன் விளக்குக் கம்பத்திற்கு கீழே நின்று யாருடனோ தொ(ல்)லைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். தனது உடலை பருத்த கோட்டினால் மறைத்திருந்தான். மேலும் இருவர் தெருவோர சாக்கடைக்கு அருகே ஓரிடத்தில் பழைய பேப்பர் மற்றும் சிறுகுச்சிகளை வைத்து தீ மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தனர். இன்னும் ஒருவனோ தெருவின் எதிர்மூலையில் தனியே அமர்ந்திருந்தான். தன்னிடம் இருந்த சிறுதுணியின் உதவியால் உடலை மறைக்க முயன்று கொண்டிருந்தான்.

அப்போதுதான் அந்த சப்தம் கேட்டது. சப்தம் என்பதை விட அலறல் என்றே சொல்லலாம். அதுவும் ஒரு இளம்பெண்ணின் குரலில். உடனே முதலாமவன் சப்தம் வந்ததிசை நோக்கிப் பாய்ந்தான். பக்கத்தில் உள்ள குறுகிய சந்தில் போய்ப் பார்த்ததில், ஒரு பத்தொன்பது வயதுப்பெண் அசையாமல் நின்றிருந்தாள். அவளருகே ஒரு நாய்க்குட்டி நின்றிருக்க அவளோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

நாயை விரட்டி விட்டபின் திரும்ப எத்தனிக்கையில் பின்னாலிருந்து ஒரு குரல் " பஹுத் தன்யவாத் பையா" (மிக்க நன்றி அண்ணா) அவளேதான். அவனோ "சலேகா பெஹன். ஜாக்கே சோஜா" (பரவாயில்லை சகோதரி. போய்த்தூங்கு) என்றான்.

பின் சிறு புன்முறுவலுடன் மெல்ல நடந்தவாறே தனது தெருவுக்கு திரும்பினான். அங்கே அவன் கண்ட காட்சியோ வேறுவிதமாய் இருந்தது. முன்பிருந்த அதே மூன்று பேர். ஆனால் தீ அணைந்து விட்டிருந்தது. குளிர் காய்ந்துகொண்டிருந்த இருவரும் நடுநடுங்கி கொண்டிருந்தனர். கடுங்குளிர் என்பதால் அவர்களது உடம்பின் ஒவ்வொரு அங்குலத்திலும் குளிர் ஊடுருவி இருந்தது. இருவரின் நடுக்கத்தையும் பார்க்கவே என்னவோ செய்தது இவனுக்கு.முடிவு : குளிர்காலம்னு இருந்தா அதில சிலபேர் நடுங்கத்தான் செய்வாங்க. அதுக்கு நாம என்னங்க பண்ண முடியும்???.

பி.கு :
1)ஒன்னுல்ல. இங்க கொஞ்சநாளாவே குளிர் ரொம்ப அதிகம். அதான் இந்தமாதிரில்லாம்.
2)கதைன்னு நெனச்சு படிச்சு ஏமாந்திருந்தா கம்பெனி பொறுப்பாகாது.

Saturday, December 11, 2010

என்னவள்

சிணுங்கல்

செல்லமாய் சிணுங்காதே
இன்னொரு முறை...
ரிங்டோனோ என
அடிக்கடி தொட்டுப்பார்க்கிறேன்
என் மொபைல்போனை...

முகப்பரு

எத்தனை முறை வேண்டுமானாலும்
அடைக்கலம் தருகிறேன்
என் முகத்தில்
வந்துவிடு என்னிடம்...
என்னவள் பாவம்
பால் போன்ற அவள் முகத்தை
பாழாக்காதே!!

Tuesday, December 7, 2010

இருதுளி


நானும் உங்களைப்போல்
நேர்நடை நடந்திருப்பேன்
ஓடியாடி மகிழ்ந்திருப்பேன்
பிறரை சாராமல் இருந்திருப்பேன்
தனியே ஒதுக்கப்படாமல் இருந்திருப்பேன்
என் நட்புவட்டமும் விரிந்திரிக்கும்
உலக அனுபவம் கிடைத்திருக்கும்
குறைந்தது வாழவாவது செய்திருப்பேன்
எனக்கும் இருதுளி கிடைத்திருந்தால்....

Saturday, December 4, 2010

எடக்குமடக்கு...

உன்னைத் தவிர
எல்லோரும் என் சகோதரியே
என்றேன்
ஏன் என்றாய்
என் உயிரை எடுக்க
நீ ஒருத்தி போதாதா?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்றும் வழக்கம்போல்
என்னை எழுப்பி காப்பி தந்தாய்
ஆயினும் ஏதோ ஒரு
இனம் புரியாத மாற்றம் என்னில்
மிகுந்த யோசனைக்கிடையில்
கேட்டேன் 'நீ பல்லு வெளக்கினியா?'
படீரென இறங்கியது
உன் கையிலிருந்த தட்டு.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நேற்று உன்னிடம்
அப்படி கேட்டிருக்க கூடாது!
தடபுடவென சத்தம்
சமையலறையில் இருந்து...
'என்னடி அங்க சத்தம்
அமைதியா பண்ண முடியாதா' என்றேன்.
இன்று பேண்டேஜோடு நான்!!!
இருந்தாலும்
அப்படி கேட்டிருக்க கூடாது!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு புத்திசாலி மனிதன் என்பவன் சில முக்கியமான் முடிவுகளை எடுக்கும்போது முதலில் கண்களை மூடி, நன்றாக யோசித்து, மனசு சொல்றபடி கேட்டு பின்பு இறுதியாக அவன் மனைவி சொல்வதை செய்வான்.


பி.கு : மக்கா அதனால நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லைனு நெனைக்கிறேன். புரிஞ்சு நடந்துக்கோங்க பொழச்சுக்கோங்க.

Wednesday, December 1, 2010

கவிதை ரெண்டு.

அறை

ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறுகன்னம் காட்டு
என்றர் மூத்தோர்
இரு கன்னங்களையும்
மாறிமாறி காட்டத்தயார்
அறைவது நீயென்றால்...

முத்தம்

மீண்டும் குழந்தையாய்
மாறத் தூண்டியது
நேற்று நீ அருகாமை வீட்டு
குழந்தைக்கிட்ட முத்தம்.

Tuesday, November 30, 2010

தப்பிக்க வழியே இல்லியா???

ஊரை விட்டு தொலைவில் இருப்பதால் தமிழ்நாட்டில் அன்றாடம் நடப்பவற்றை தெரிந்து கொள்ள நான் தினமலர் படிப்பது வழக்கம்.

சமீபத்தில் அவ்வாறு படித்து கொண்டிருக்கும்போது இதைப் படித்தேன்.
எனக்கு ஒரே அதிர்ச்சியா இருந்தது. நம்ம அழிவு நெருங்கிருச்சுன்னு நெனச்சேன். ஏற்கனவே இதக்கேள்விப்பட்டு நெறையப்பேரு ஆஸ்பத்திரில அட்மிட் ஆயிருக்கறதா கேள்விப்பட்டேன். எனக்கு வேற பிஞ்சு மனசு. அது தாங்குமா இல்லையான்னு வேற தெரியலையே.
இந்த நாள்ல ஆம்புலன்சு வசதி வேற கிடையாதாம். ஏன்னா எல்லாத்தையும் இந்த வைபோவத்துக்காக முன்கூட்டியே ரிசர்வ் பண்ணி வச்சுட்டாங்களாம்.இந்தமாதிரி தவிச்சுட்டு இருந்தப்பதான் இந்த செய்திய படிச்சேன். கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருந்தது. ஆனாலும் என்ன சந்தோசம் ஒரு ஆறு வாரத்துக்கு மட்டும்தானே. அதுக்கு அப்புறமா எப்படியும் இதை சமாளிச்சுதான் ஆகணும்.

இதுக்கே என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கும்போது அடுத்த இடியா இந்த தகவல்.
ஒரு தாக்குதலையே சமாளிக்க பயங்கரமா பிளான் பண்ணவேண்டி இருக்கே. அதுக்குள்ள அடுத்த அஸ்திரத்தை எடுத்துட்டாங்களே.

நான் ஏன் இந்த அளவுக்கு பதர்றேன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு. நாங்க இருக்குற ஏரியாவுல தமிழ் படங்கள் அதிகமா ரிலீஸ் ஆகாது. எப்பவாவது ஒரு படம் ரிலீஸ் ஆகும். ஆனா பாருங்க நம்ம டாக்டர் தம்பியோட படம் மட்டும் கரெக்டா ரிலீஸ் பண்ணிருவாங்க. நம்ம அறைத்தோழனுக்கு சினிமான்னா ரொம்ப இஷ்டம். எந்த தமிழ் படம் போட்டாலும் உடனே டிக்கெட் புக் பண்ணிடுவான். இப்படித்தான் இதுக்கு முன்னாடி கூட ஏதோ எறாவோ சுறாவோ ஒரு படம், அதுக்கு முன்னாடி சாட்டைக்காரனோ வேட்டைக்காரனோ ஏதோ ஒண்ணு முன்கூட்டியே (கேக்காம) புக் பண்ணித்தொலச்சதுனால போயிருந்தோம். அப்பப்பா ஒரே ரணகளம் போங்க. { அதிலும் குறிப்பாக சொறா படத்துக்கு போகும்போது முந்தின ஷோ பாத்த ஒரு நண்பன் சொன்னான் "டே புக் பண்ணின காசு போனாபோகுது. தயவுசெஞ்சு போகாத, மூணுமணி நேரமாவது மிஞ்சும்". அதையும் மீறிப்போயி :( }

நான் தப்பிக்க வழி எதுவுமே இல்லையா??

நீதி : ஒருத்தன் சாகறது முடிவாயிட்டா அவனை ஏற்கனவே செத்தவனாலகூட காப்பாத்த முடியாது.

பி.கு :
இந்த அதிர்ச்சி தரும் தகவல்களை படிச்சத்தில் இருந்து தினமலர் வெப்சைட்டில் சினிமா செய்திகள் பக்கமே போறதில்ல.

Thursday, November 25, 2010

தல ரஜினி

முதலில் இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைத்தமைக்கு பதிவுலகில் பாபு அவர்களுக்கு நன்றி.


ரஜினி..

அநேகமாக ஒவ்வொரு சினிமா ரசிகருக்கும் தெரிந்த ஒரு பெயர். ஒரு ஒப்பற்ற கலைஞர் (ஆனால் சமீபகாலமாக அவரை மையமாக வைத்து ஜோக்ஸ் பரப்பப்படுவது சிறிது சங்கடமாக இருக்கிறது). அறிமுகம் தேவை இல்லை என நினைக்கிறேன். அவரைப்பற்றியும் அவரது நடிப்பைப் பற்றியும் எக்கச்சக்கமாக எழுதலாம்.

சிறுவயதில் நகைச்சுவைக்காக பார்க்க ஆரம்பித்து பின் அவரது ஸ்டைல் மற்றும் நடிப்பில் அசந்துபோய் ரசிகனாய் மாறிவிட்டேன். ரஜினியின் மொத்த படங்களில் இருந்து பத்தை மட்டும் பிரித்தெடுப்பதென்பது அவ்வளவு எளிதானதல்ல. இருப்பினும் மிக ரசித்த படங்கள் என நான் நினைப்பதை வரிசைப்படுத்துகிறேன்.

படங்கள் மற்றும் அவற்றை பிடிக்க காரணம்:

படையப்பா
நகைச்சுவை மற்றும் அவரது ஸ்டைல்
ஜானி
காற்றில் எந்தன் கீதம் என்ற பாடலுக்காக மட்டுமே படம் பார்க்க ஆரம்பித்து பின் மொத்த படமும் பிடித்துப்போய் விட்டது. (இந்த படத்தின்போது ஸ்ரீதேவிக்கு வெறும் 17 வயசு மட்டுமே என்பது உபரிதகவல்).
பாட்ஷா
அசாத்தியமான ஸ்டைல்
அண்ணாமலை
குஷ்பூ மற்றும் ஜனகராஜ் உடனான நகைச்சுவைக் காட்சிகள், சரத்பாபு உடனான நட்பு மற்றும் மோதல்.
தளபதி
நல்ல நட்பிற்க்கு ஒரு சிறந்த உதாரணம்.
16 வயதினிலே
என்னதான் வில்லனா இருந்தாலும் ரொம்ப பிடிச்சிருந்தது (காரணம் சொல்லத்தெரியல).
தர்மத்தின் தலைவன்
வாத்தியார் ரஜினியின் நகைச்சுவைக் காட்சிகள்.
நல்லவனுக்கு நல்லவன்
ஒரு அப்பாவாக(நான் இல்லீங்க ரஜினி) மிகப் பிடித்திருந்தது.
முரட்டுக்காளை
பொதுவாக எம்மனசு தங்கம் மற்றும் அவரது தம்பிகளுடனான நகைச்சுவைக் காட்சிகள்.
பில்லா
ஒரு டானாக ரஜினி மிகப்பொருந்தி வந்தார்.

தில்லுமுல்லு, மூன்று முகம், முத்து, முள்ளும் மலரும், தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், நான் சிகப்பு மனிதன் இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். பத்து மட்டுமே என்பதால் எல்லாவற்றையும் குறிப்பிட இயலவில்லை.

அவர் நடித்து எனக்கு பிடித்த பாடல்கள் சில இதோ:

முத்தமிழ்கவியே வருக - தர்மத்தின் தலைவன்
பேசக்கூடாது, ஆசை நூறுவகை - அடுத்தவாரிசு
சந்தனக்காற்றே - தனிக்காட்டுராஜா
காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு
தோட்டத்தில பாத்திகட்டி - வேலைக்காரன்
நூருவருஷம் - பணக்காரன்
(இன்னும் பல என்பதால் வெறும் சேம்பிளோடு நிறுத்திக்கொள்கிறேன்.)

Tuesday, November 23, 2010

குஜாரிஷ்

சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் ரோனி ஸ்குருவாலா தயாரித்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி ஹ்ருதிக், ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடித்து ஹிந்தியில் வெளிவந்துள்ள படம்தான் குஜாரிஷ்.


நண்பனின் சதியின் காரணமாக ஒரு விபத்தில் சிக்கி பதினான்கு வருடங்களாக க்வாட்‌ரிப்‌லிஜியா நோயால் அவதிப்படும் நாயகன் ஹ்ருதிக் மெர்ஸி கில்லிங்க்காக கோர்ட்டில் அப்ளை செய்கிறார். ஆனால் கோர்ட் அதற்கு மறுத்து பெட்டிஷனை ரத்து செய்கிறது. இதனால் சிறிதுகாலம் அமைதியாக இருக்கும் நாயகன் பின்பு தனது ரேடியோ ரசிகர்களின் உதவியுடன் மீண்டும் மெர்ஸி கில்லிங்க்காக அப்ளை செய்கிறார். அதன்பின்பு அவருக்கு என்ன தீர்ப்பு கிடைக்கிறது மற்றும் அவரது முடிவு என்ன என்பதே கதை.

புகழ்பெற்ற மேஜிசியனாக வருகிறார் ஹ்ருதிக். அவரது வளர்ச்சி பொறுக்காமல் அவரது நண்பர் சித்திக் ஒரு ஷோவின்போது விபத்தை ஏற்படுத்தி விடுகிறார். அதன் காரணமாக கழுத்துக்கு கீழே உணர்வற்று போய்விடுகிறது. நோயுடனே பதினான்கு வருடங்களை கடத்துகிறார். இடையில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரேடியோ ஜாக்கியாக வேலை செய்து அதிலும் புகழ்பெறுகிறார்.

நடிப்பில் அசத்தி இருக்கிறார் ஹ்ருதிக். ஒவ்வொரு காட்சியிலும் அவர் கண்கள் பேசுகின்றன. அவர் படும் அவஸ்தையை நமக்கு தனது முகம் மூலமாகவே வெளிப்படுத்துகிறார். நாயகனை பராமரிக்க வரும் செவிலியராக ஐஸ்வர்யா ராய். ஐஸ்க்கு நீண்டநாள் கழித்து நடிப்புத்திறமையை காட்ட ஒரு நல்ல வாய்ப்பு இந்த கதாபத்திரம். ஐஸ் ஹ்ருதிக் உடன் போட்டி போடுகிறார் நடிப்பில். இவர்கள் இருவருக்கும் இடையிலான காட்சிகள் ஒவ்வொன்றும் அருமை.


சித்திக்கின் மகனாக வரும் ஆதித்யா ராய் கபூரும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். நாயகனின் வக்கீல் நண்பியாக வரும் ஷெர்னா பட்டேல் நட்புக்கு புது அவதாரமாக திகழ்கிறார்.

படம் முழுக்க கோவாவில் படமாக்கியிருப்பதால் ஒவ்வொரு காட்சியிலும் கண்ணுக்கு குளிர்ச்சி இயல்பாகவே வருகிறது (அந்த குளிர்ச்சி இல்லை. இது இயற்கை). வித்தியாசமான கதைக்களம் என்பதால் இயக்குநர் திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது.

வழக்கமான திரைப்படங்களை போல இதில் எந்த மசாலாத்தனமும் கிடையாது. இந்த படத்தை ரசிப்பதற்கு பொறுமை மிக அவசியம். மொத்தத்தில் கலாரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்து. ஒவ்வொரு ரசிகனும் தவறாமல் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம். (இந்த வருடத்தில் நான் பார்த்த மொத்த இந்தி படங்களிலேயே சிறந்ததாக இதனை சொல்லலாம்.)

Sunday, November 14, 2010

கோழியும் நானும்


என் பெயர் சுகன். நான் ஒரு தனியார் நிருவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள் அலுவலகத்தில் நடந்த பார்ட்டி ஒன்றுக்கு போயிருந்தேன். அவ்வப்போது பார்ட்டிகளில் குடிப்பது வழக்கம். அன்றும் அப்படித்தான் போதை கொஞ்சம் அதிகமாகிவிட்டமையால் தள்ளாடியபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். மனைவி அமலா ஏற்கனவே தூங்கிவிட்டிருந்தாள். அவளுக்கு அருகே அதே உடையுடன் தூங்கிவிட்டேன்.

தூங்கி எழுந்த போது என் படுக்கை அருகே ஒரு புதுஆள் நின்றிருந்தான். நான் அவனிடம் " யார் நீ? அதுவும் என் படுக்கையறையில்" என்றேன். அதற்கு அவனோ " நான் தான் எமன். இது உன் படுக்கையறை அல்ல" என்றான். நான் " என்ன நான் இறந்துட்டேனா? அதுமட்டும் ஆகாது. நான் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. என் குடும்பத்துக்கு ஒரு குட்பை கூட சொல்லலை. என்னை நீ திருப்பி அனுப்பு " என்றதற்கு அவனோ(ரோ) "அனுப்பலாம். ஆனால் ஒரு நாயாகவோ அல்லது கோழியாகவோ மட்டுமே " என்றான்.

என் வீட்டிற்கு அருகில் ஒரு கோழிப்பண்ணை இருப்பது நினைவுக்கு வந்ததால் நானும் ஒரு கோழியா மாறி திரும்பிவர சம்மதித்தேன். அதன்படியே எமனும் என்னை திருப்பி கோழி உருவில் அனுப்பினான்.

பண்ணைக்குள் சுற்றிக்கொண்டிருந்தபோது ஒரு சேவல் எதிரே வந்தது. "நீ தான் புதுசா வந்திருக்கிற கோழியா? எப்படி இருக்கு முதல்நாள் அனுபவம்" எனக் கேட்டது. நான் " நல்லாத்தான் இருக்கு. ஆனா ஒரு வித்தியாசமான ஃபீலிங். அதாவது நான் உள்ளுக்குள் வெடிக்கிறமாதிரி இருக்கு" என்றேன். அதுவோ " நீ முட்டை இடப்போறே. இதுக்கு முன்னாடி நீ முட்டை இட்டதே இல்லையா என்ன?" என்றது. நான் "இல்லை" என்றேன். "கொஞ்சம் ரிலாக்சா இரு. தானா வந்துடும்" எனக்கூறி விடைபெற்றது.

ஒரிரு வினாடிகளில் பின்புறமாக ஒரு முட்டை கீழே வந்து விழுந்தது. எனக்கு மிகமிக சந்தோசமாக இருந்தது ஏனென்றால் முதன்முறையாய் நான் தாய்மையடைந்து விட்டதால். இரண்டாவது முட்டை இட்டபோது அந்த மகிழ்ச்சி இன்னும் இரட்டிப்பானது. அதே சந்தோசத்தோட மூணாவது முட்டை இடும்போது என் பின்னந்தலையில் ஒரு அடி இடியாய் இறங்கியது கூடவே என் மனைவி குரலும் " யோவ் நீ உக்காந்து இருக்குறது நம்ம படுக்கை மேல".


[இணையத்தில் உலவுகையில் எங்கோ எப்போதோ படித்தது.]

Thursday, November 11, 2010

பார்வைஎன்றோ ஓர்நாள்
நீ வீசிச்சென்ற
கடைவிழிப்பார்வை
இன்றேனும் கிடைக்காதா
என அன்றாடம்
ஏங்கித்தொலைக்கும்
என் மனத்தை
என்ன செய்ய?

Monday, November 8, 2010

அவுட்லுக் - ஒரு பயனுள்ள தகவல்

நம்மில் நிறையபேர் மின்னஞ்சலுக்காக அவுட்லுக் பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு பயன்படுத்தும்போது சில நேரங்களில் நம்மையும் அறியாமல் மின்னஞ்சலின் தலைப்பு தர மறந்து விடுவோம். அலுவலகத்தில் இவ்வாறு நேர்ந்து விட்டால் அது நம்மைப்பற்றி மற்றவர் தவறாய் நினைக்க நேரிடலாம்.
அவ்வாறு நேராமல் தடுக்க ஒரு சிறு வழி இதோ.

1. முதலில் அவுட்லுக்கை திறந்து கொள்ளவும்.
2. பின் Alt+F11 கீகளை ஒருசேர அழுத்தவும். விசுவல் பேசிக் எடிட்டர் திறக்கும்.
3. பின் Ctrl+R கீகளை அழுத்தவும். இது ப்ராஜெக்ட்-ப்ராஜெக்ட்1 என்ற கோப்பை திறக்கும்.
4. அதில் இடதுபக்க மூலையில் Microsoft Outlook Objects அல்லது Project1 என்ற எழுத்து கிடைக்கும். 5. அதனை விரித்தால் ThisOutLookSession என்பதை காணலாம். அதன்மீது இருமுறை அழுத்தவும் (Double click). இது ஒரு Code pane ஐ வலது புறத்தில் திறக்கும்.
6. கீழே உள்ளவற்றை காப்பி செய்து அதில் பேஸ்ட் செய்து பின் சேமிக்கவும்.
Private Sub Application_ItemSend(ByVal Item As Object, Cancel As Boolean)
Dim strSubject As String
strSubject = Item.Subject
If Len(Trim(strSubject)) = 0 Then
Prompt$ = "Subject is Empty. Are you sure you want to send the Mail?"
If MsgBox(Prompt$, vbYesNo + vbQuestion + vbMsgBoxSetForeground, "Check for Subject") = vbNo Then
Cancel = True
End If
End If
End Sub

அடுத்த முறை நீங்கள் மின்னஞ்சலை தலைப்பில்லாமல் அனுப்பும்போது ஒரு பாப்-அப் மெனு வந்து அதனை சுட்டிக்காட்டும்.

Sunday, November 7, 2010

ஆக்ச‌ன் ரீப்ளே

விபுல் ஷா தயாரித்து இயக்கி அக்ச‌ய் குமார், ஐஸ்வர்யா ராய், நேகா தூபியா மற்றும் பலர் நடித்து ஹிந்தியில் வெளிவந்துள்ள படம்தான் ஆக்ச‌ன் ரீப்ளே.எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அப்பா அம்மாவைப் பார்த்து திருமணத்தை வெறுக்கிறான் ஒரு இளைஞன். அவ‌ர்க‌ள‌து திரும‌ண‌ம் தாத்தா பாட்டி வ‌ற்புறுத்த‌லின்பேரில் ந‌ட‌க்கிற‌து. பெற்றோர் திருமணம் காதல் திருமணமாய் இருந்திருந்தால் இந்த மாதிரி சண்டை போடாமல் இருப்பார்களே என நினைக்கிறான்.அவ‌னுடைய‌ காத‌லியின் தாத்தா க‌ண்டுபிடித்த‌ கால‌ எந்திர‌த்தின் உத‌வியால் த‌ன்னுடைய‌ பெற்றோரின் இற‌ந்த‌ கால‌த்துக்குள் நுளைகிறான். அத‌ன் பிற‌கு இற‌ந்த‌ கால‌த்தில் எவ்வாறு த‌ன‌து பெற்றோருக்கிடையில் காத‌லை உருவாக்குகிறான், இருவ‌ருக்குமிடையிலான‌ நெருக்க‌த்தை எவ்வாறு அதிக‌ரிக்கிறான் என்ப‌தே க‌தை.

நாய‌க‌னாக‌ ஆதித்யா ராய் க‌பூர் ம‌ற்றும் அவர‌து பெற்றோராக‌ அக்ச‌ய் குமார் ம‌ற்றும் ஐஸ்வர்யா ராய். ப‌ட‌த்தில் 1975க‌ளை காட்டும் காட்சிக‌ளில் இய‌க்குன‌ரின் மென‌க்கெட‌ல் தெரிகிற‌து ம‌ற்றும் அக்ச‌யின் ஓட்ட‌லில் வேலை செய்ப‌வ‌ராக‌ வ‌ரும் ராஜ்பால் யாத‌வ்‍‍‍‍‍‍‍‍-ன் காமெடி கொஞ்ச‌ம் ஆறுத‌ல்.அதைத் த‌விர‌ ப‌ட‌த்தில் சொல்லிக்கொள்ளும்ப‌டி ஒன்றும் இல்லை. லாஜிக் என்ப‌து சுத்த‌மாக‌ கிடையாது. இசையும் சுமார் ர‌க‌ம்தான்.

அக்ச‌ய் இத‌ற்காக‌ நீண்ட‌முடி வ‌ள‌ர்த்து த‌ன‌து ஹேர்ஸ்டைலை மாற்றி இருக்கிறார். அவ‌ரை இதில் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு கோமாளி போல‌ காட்டி இருக்கின்ற‌ன‌ர். அக்ச‌யை எப்போதும் க‌லாய்க்கும் கேர‌க்ட‌ரில் ஐஸ். ஐஸ்வர்யா ராய் ராவ‌ண‌ன் ம‌ற்றும் எந்திர‌னுக்கு அப்புற‌ம் இப்ப‌டி ஒரு ப‌ட‌மா?. எப்ப‌டி இந்த‌ ப‌ட‌த்திற்கு ஒப்புக்கொண்டார் என்றே விள‌ங்க‌வில்லை. ஐஸின் ந‌ண்ப‌ராக‌ வ‌ரும் ரான்விஜ‌ய் சிங்கின் ந‌டிப்பும் ர‌சிக்கும்ப‌டி இல்லை. நேகாவும் இதே ர‌க‌ம்தான்.


நாய‌க‌ன் வ‌ந்த‌ கால‌ எந்திர‌ம் 1975க்கு சென்ற‌வுட‌ன் சேத‌ம‌டைந்து விடுகிர‌து. பின்பு அவ‌ர் கால‌ எந்திர‌ம் க‌ண்டுபிடித்த‌வ‌ரை 35 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பே ச‌ந்திப்ப‌தாக‌வும், அவ‌ர் மாற்று இய‌ந்திர‌ம் க‌ண்டுபிடிப்ப‌தாக‌வும் அத‌ன் மூல‌ம் திரும்பி 2010க்கு வ‌ருவ‌தாக‌வும் இருப்ப‌து சுத்தாக‌ ஏற்றுக்கொள்ள‌ இய‌ல‌வில்லை. இவ்வாறு நிறைய‌ இட‌ங்க‌ளில் லாஜிக் உதைக்கிற‌து (எங்கேன்னு கேக்காதீங்க‌).

இய‌க்குன‌ர் விபுல் ஷாவைப் ப‌ற்றி இங்கே கண்டிப்பாக சொல்ல‌ வேண்டும் (ஏன்னா த‌யாரிச்ச‌ புண்ணிய‌வான் அவ‌ர்தானே). இவ‌ர் மின்ன‌லே ப‌ட‌த்தின் ரீமேக் ஆன‌ ரெஹ‌னா ஹை தேரே தில்மே ப‌ட‌த்தில் ரைட்ட‌ராக‌ ப‌ணிபுரிந்த‌வ‌ர். க‌ட‌ந்தாண்டு வெளிவ‌ந்த‌ ல‌ண்ட‌ன் ட்ரீம்ஸ் என்ற‌ ப‌ட‌த்தை இய‌க்கிய‌வ‌ர் (அம்ம‌ணி அசின், ச‌ல்மான் ம‌ற்றும் அஜ‌ய் தேவ்க‌ன் ஆகியோர் ந‌டித்த‌து). காக்க‌ காக்க‌ வின் ஹிந்தி ரீமேக் (ஜான் ஆப்ர‌காம் ம‌ற்றும் ஜெனிலியா) ம‌ற்றும் ஏ.ஆர்.முருக‌தாஸின் அடுத்த‌ ஹிந்தி ப‌ட‌ம் (அக்ச‌ய் குமார் ம‌ற்றும் அசின்) இர‌ண்டையும் த‌யாரிக்கிறார் என்ப‌து உப‌த‌க‌வ‌ல் (ந‌ல்ல‌வேளை இய‌க்க‌லை).

ஓர‌ள‌வு ந‌ல்ல‌ க‌தை, இன்னும் ந‌ன்றாக‌ உருவாக்கி இருக்க‌லாம். மொத்த‌த்தில் ஆக்ச‌ன் ரீப்ளே ஒரு பெருத்த‌ ஏமாற்ற‌ம் (என்ன‌ ப‌ண்ற‌து? விம‌ர்ச‌ன‌ம் எழுதி ம‌ன‌ச‌ தேத்திக்க‌ வேண்டிய‌துதான்). தீபாவ‌ளிக்கு வேற‌ ந‌ல்ல‌ப‌ட‌ம் ஏதும் ரிலீஸ் ஆகாத‌தால் (நாங்க‌ளும் அப்ப‌டிதானே போயி மாட்டிக்கிட்டோம்) ஓர‌ள‌வு வ‌சூல் எதிர்பார்க்க‌லாம் (வேறென்ன‌ போட்ட‌ காசுதான். ப‌ட்ஜெட் 40 கோடிங்க‌).

பி.கு : இப்ப‌டிக்கு மொக்க‌ப்ப‌ட‌த்த‌ தேடிப்போயி பார்த்து பின் புல‌ம்புவோர் ச‌ங்க‌ம்.

Thursday, November 4, 2010

தீப ஒளித் திருநாள்...


அனைவருக்கும்
என் உளம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இந்நாள் நம் அனைவர் வாழ்விலும் மட்டட்ற மகிழ்ச்சியை தரட்டும் என் வேண்டிக்கொள்கிறேன்.


என் அலுவலகத்தில் செய்யப்பட்ட தீபாவளி ஏற்பாடுகள் சில.பி.கு : நண்பர்கள் அனைவரும் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Monday, November 1, 2010

கேமரா ஆல்பம்.

நான் எனது மொபைல் கேமராவில் சுட்ட சில புகைப்படங்கள் இதோ உங்களின் பார்வைக்காக.


கடந்த விடுமுறையில் ஊர் சென்றிருந்தபோது தோட்டத்தில்அதே விடுமுறையில் ஊரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அருவிக்கு சென்றிருந்தபோது

கம்பெனியில் வேலைக்கு நடுவேஇப்போதைய வீட்டின் பால்கனியில் இருந்து


Sunday, October 31, 2010

மணநாள் வாழ்த்து

ஈருடல் ஓருயிராய்
சில பத்தாண்டுகள்
இணைபிரியா வாழ்வு கண்டு
எமை பெற்றெடுத்து
சீராட்டி தாலாட்டி
சோறூட்டி ஆளாக்கி
படிப்பறிவித்து
இந்நிலைக்கு கொண்டுவர
எவ்வளவு பாடுபட்டீர்!
உம்மில் பிறந்தமைக்கு
யாம் பெருமை கொண்டோம்.
என்றேனும் ஓர்நாள்
எமை பெற்றமைக்கு
நீர் பெருமைப்படுவீர்.
உம்மை வாழ்த்த
வயதின்மையால் வணங்குகிறோம்.


இன்று திருமணநாள் காணும் என் பெற்றோருக்கு இதனை உரித்தாக்குகிறேன்.

Wednesday, October 27, 2010

எறும்பை ஒழிப்பது எப்படி?


கேள்வி : எறும்பை ஒழிப்பது எப்படி? விரிவாக விளக்குக. [எட்டு மதிப்பெண்கள்]

(இரண்டு மார்க் கேள்வியான இதை எட்டு மார்க்குக்கு கேட்டதைக் கண்டு மிரண்ட ஒரு புத்திசாலி மாணவனின் பதில் இதோ)

பதில் : எந்த ஒரு உயிரையும் கொல்வது எனக்கு பிடிக்காது. இருப்பினும் எட்டு மதிப்பெண்ணுக்காக இன்று எறும்பை கொல்லவேண்டிய கட்டாயத்தில் இதை எழுதுகிறேன்.
எறும்பை கீழ்க்காணும் வழிகளில் கொல்லலாம்.

* கையில் பிடித்து நசுக்கலாம்.
* காலால் மிதித்து கொல்லலாம்.
* விசப்பொடியை தூவி கொல்லலாம்.
* குவாட்டர்ல தண்ணி மிக்ஸ் பண்ணாம கொடுத்து கொல்லலாம்.
* சிகரெட் லைட்டரால பொசுக்கலாம்.
* பிடிச்சு தண்ணிதொட்டில அமுக்கி மூச்சு திணற வச்சு கொல்லலாம்.
* முகத்தில தலையணையை வைத்து அமுக்கி கொல்லலாம்.
* சீனில சயனைடு கலக்கி கொடுத்து கொல்லலாம்.
* பிளேடால துண்டு துண்டா அறுத்து கொல்லலாம்.
* கொதிக்கிற எண்ணைச்சட்டில போட்டு கொல்லலாம்.

இதெல்லாம் கஷ்டமாக இருந்தால் ஒரு எளிய வழி உள்ளது. அது என்னவென்றால் முதலில் மிளகாய்பொடியை சீனியில் கலக்கி எறும்பு வரும்வழியில் வைக்க வேண்டும். அது சாப்பிட்டவுடனே அதிக காரம் காரணமா தண்ணி தாகம் எடுக்கும். தண்ணி குடிக்க பெரிய தொட்டிக்கு போகும்போது அதை உள்ள தள்ளி விட்டுறனும். ஒடம்பெல்லாம் நனஞ்சுபோயி அதை காய வைக்க தீக்கு பக்கத்தில போகும்போது தீயில ஒரு பாம் போடுங்க. உடனே அதை ஹாஸ்பிட்டல்ல அவசரவார்டுல சேர்ப்பாங்க. அங்க யாரும் இல்லாத போது நீங்க மட்டும் தனியா போயி அதோட முகத்தில மாட்டி இருக்கிற ஆக்சிஜன் மாஸ்க்க எடுத்துடுங்க. வேலை ரொம்ப சுலபமா முடிஞ்சிடும்.

இவ்வாறு மேற்க்கண்ட வழிமுறைகளில் எறும்பினை கொல்லலாம்.

(ங்கொய்யால.. எங்க கிட்டயேவா? ரெண்டு மார்க் கேள்வியா நீ எட்டு மார்க்குல கேட்ட எழுத மாட்டோம்னு நெனச்சியா? எட்டு மார்க் கிடைக்குதுன்னா நாங்க யாரவேணுமின்னாலும் கொள்வோம். எறும்பெல்லாம் ஒரு மேட்டரா?)

பி.கு :
* ஜெயந்த்க்கு உதவியா இருக்கும்னு நெனக்கிறேன்.
* அந்த மாணவன் யாருன்னு கேக்காதீங்க? சொல்லமாட்டேன்..சொல்லமாட்டேன்..ரகசியம்..ரகசியம்..

Friday, October 22, 2010

சுறுசுறுப்பு

விடியகால நாலர மணி. அம்மா கொரலு "கண்ணு, எழுந்திரிப்பா. வெதப்புக்கு ஆள் கூப்புட்டுருக்கோம். காப்பிய குடிச்சுட்டு வெளிய போயிட்டு வந்து சோளத்த பையில கட்டி வையி". மொகங்கழுவி காப்பித்தண்ணிய குடிச்சுட்டு வெளிய போயிட்டு வந்து சாமத்துல ரெண்டு மணிக்கு ஊறப்போட்ட சோளத்த தண்ணி வடிச்சு பையில கட்டி முடிச்சா மணி அஞ்சரை ஆயிருச்சு.

அப்படியே ஒரம், சோளத்த வண்டில ஏத்தி ஆளுங்களையும் அனுப்பிட்டு பாத்தா மணி ஆறு. அப்புறமா கட்டுத்தொறக்கு போயி ரெண்டு உருப்புடியோட சாணி வழிச்சு கட்டுத்தொறய கூட்டி சுத்தம் பண்ணி பால கறந்து முடிச்சுட்டு மாட்டுக்கும் கன்னுக்கும் தண்ணி கட்டி தீனி போட்டுட்டு பால் கேன எடுத்துட்டு போயி கடையில ஊத்திட்டு பாத்தா மணி ஏலு.

அதுக்கப்புறமா அவசர அவசரமா ஒருவாயி கரசோறு குடிச்சிட்டு தண்ணிக்கொடம் எடுத்துக்கிட்டு காட்டுக்கு போனா அங்க ஒரம் சோளம்-லாம் ஒரே எடத்துல கெடக்கு. அதையெல்லாம் வெதப்புக்கு தகுந்த மாதிரி அங்கங்க பிரிச்சு வச்சுட்டு ஆளுங்களுக்கு தீர தீர ஒரம் சோளம் அப்பறம் எடஎடயே தண்ணி கொடுத்து முடிச்சா மணி பத்து.

அப்பறம் அங்க அம்மா கையில பெனஞ்ச சோறு ஒருவாயி சாப்புட்டு மூணு மணி வரைக்கும் ஆளுங்களுக்கு தேவயான ஒரஞ்சோளம் எடுத்துட்டு ஏர் கூடவே நடந்து, எடைல யாருக்காது மாத்திவுட்டு இப்படியா வெதப்பு முடிச்சு வீடு கெளம்பியாச்சு. வீடு போனதுக்கு அப்பறம் நல்லா கரசமண்ணு போக தேச்சு குளிச்சா மணி நாலரை.

மாடு கன்னுல்லாம் காலைலருந்து கட்டியே கெடக்கும். அதுக்கு போயி புல்லறுத்து கொண்டாந்து போட்டுட்டு வீடுவந்து கட்டல்ல சாஞ்சா மணி அஞ்சர. ஒரு ஆறு மணிக்காட்ட போயி பால் கறந்து கொண்டாந்து கடையில ஊத்திட்டு ஊட்டுக்கு வந்தா மணி ஏழு.

அப்பறம் காலைல இருந்து பாக்காத நம்ம பசங்கள பாக்கறதுக்கு ஒரு ரவுண்டு போயிட்டு நாயம் பேசிட்டு வந்தா மணி எட்டர. அதுக்கும்பொறவு சாப்பாடு சாப்புட்டு கொஞ்சநேரம் கதையடிச்சுட்டு மறுநாள் வெதப்புக்கு தேவயான சோளப்பைய எடுத்து பிரிச்சு தனியா வச்சுட்டு வந்து கயித்துக்கட்டல எடுத்து வாசல்ல போட்டு அக்கடான்னு படுத்தா மணி பத்து.
இவையனைத்தும் என் கண்முன் நிழலாடியது இன்று காலை நான்காம்முறையாக அலாரத்தை "ஸ்னூஸ்" செய்தபோது.

Wednesday, October 20, 2010

பகிர்வு

PACK MY BOX WITH FIVE DOZEN LIQUOR JUGS

இந்த வார்த்தையின் விசேஷம் என்னவென்றால், ஆங்கிலத்தில் உள்ள இருபத்தாறு எழுத்துக்களும் இதில் உள்ளன.
============================================================================
ஒருத்தர் குளிக்கும்போது ஷாம்பூவ தலைக்கு மட்டுமில்லாம தோளிலும் போட்டார். அவரது மனைவி ஏன்னு கேட்டபோது சொன்னாராம் அந்த ஷாம்பூ பேரு HEAD & SHOULDERSனு.
============================================================================
பரிட்சைஅறையின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அந்த ஒரு எடத்துல மட்டும்தான் ஒரு பையன் பொண்னுகிட்ட கொஞ்சமாவது காட்டேன்னு கேக்க முடியும்.
============================================================================
ஒரு நாள் சர்தாரோட அப்பா இறந்துட்டார். உடனே அவரு ஓன்னு அழ ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச நேரத்தில அவருக்கு ஒரு ஃபோன்கால் வந்தது. அதற்கப்புறம் அழுகை ரொம்ப அதிகமாயிருச்சு. சுத்தி இருந்தவங்க ஏன் என்னாச்சுன்னு கேட்டதுக்கு அவர் சொன்னாராம் "என் தங்கச்சியோட அப்பாவும் இறந்துட்டாராம்".
============================================================================
இந்தியாவிலுள்ள பெண்களில் எழுபது சதவீதம் பேரோட பெயர்கள் "A" என்கிற ஆங்கில வார்த்தையில் முடிவதாகவும், இருபது சதவீதம் பேரோட பெயர்கள் "I" என்கிற ஆங்கில வார்த்தையில் முடிவதாகவும் இருக்காம்.
சந்தேகம் இருந்தா உங்களுக்கு தெரிஞ்ச பெண்களின் பெயர்கள வச்சு சோதிச்சு பாருங்க.
============================================================================
கடந்த வாரம் படித்ததில் எனக்கு பிடித்த ஒரு வாசகம்:

"THERE IS NOTHING LIKE BUSY;
ITS ALL ABOUT PRIORITIES"
============================================================================

பி.கு : கடுமையான பணிச்சுமை மற்றும் எனது இணைய இணைப்பின் குளறுபடி காரணமாக கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக யாரோட வலைப்பூ பக்கமும் வரமுடியாம போயிட்டுது.

Monday, October 4, 2010

நான் இறந்து போயிருந்தேன்

நான் இறந்து போயிருந்தேன்
நீ என்னை விடுத்து
மாற்றானின் கரம் பிடித்த அந்தப்பொழுதில்..
எத்தனை எளிதாய்
மறந்து விட்டாய் அத்தனையையும்!!
உன்னை மறக்கச்சொல்லி
வழக்கமான கதையாய் மாற்றிவிட்டாயே
நம் உன்னத காதலை..
எவ்வளவு ஆத்திரப்பட்டேன் தெரியுமா அன்று..
என்னுள் எறிந்த தீ சொல்லிட்று
உன்னை அடைய
அவள் கொடுத்து வைக்காதவள் என்று...
உனக்காக நான்
தாடி வளர்க்க போவதில்லை.
குடிக்க போவதில்லை.
உன் பெயரை உளறிக்கொண்டு திரியப்போவதில்லை.
மாறாக உன் முன்னால்
நல்வாழ்வு வாழ்ந்து காட்டப்போகிறேன்..
இது சாபமல்ல சபதம்..
இதோ தொடங்கி விட்டேன்
பயணத்தை
எனக்கான என் விடியலை நோக்கி...


பி.கு : பாரத் என்கிற நண்பரின் பின்னூட்டம் காரணமாக ஒரு சிறு முயற்சி.
[பாரத்... பாரதி... said...

"நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...]

Saturday, October 2, 2010

பணம்


சொந்தஊரைவிட்டு வெகுதொலைவில்
கண்களில் எப்போதும் ஒரு கலக்கம்
உப்பு சப்பில்லாத வாழ்க்கை
அரைகுறை தூக்கம்
நேரங்கெட்ட சாப்பாடு
எதிலும் ஈடுபாடில்லா நிலை
எக்கச்சக்க பிரச்சனைகள்
பெயருக்கு சில நண்பர்கள்
செல்போன் மட்டுமே கடவுளாய்
இத்தனைக்கும் மத்தியில்
நம்மை இயங்கவைக்கும்
மூன்றெழுத்து மந்திரம்.

Friday, September 24, 2010

விந்தை


நீ சிரிக்கையில்
சிதறிய
முத்துக்களை பார்த்து
உன் பெயரென்ன என்றேன்
நீயோ
சிந்தாமணி என்கிறாய்.

Monday, September 20, 2010

மன்னாதி மன்னன்-கிருஷ்ணதேவராயர்

முதலில் என்னையும் மதித்து தொடர்பதிவு எழுத அழைத்த நண்பர் ஜெயந்த் அவர்களுக்கு நன்றி.

மன்னாதி மன்னன் தலைப்பில் இந்திரா அவர்கள் திப்பு சுல்தான் பற்றியும், அண்ணாமலை அவர்கள் ராஜராஜசோழன் பற்றியும் ஏற்கனவே எழுதிவிட்டனர்.
மன்னாதி மன்னன் என்கிற இந்த தொடர்பதிவில் கிருஷ்ணதேவராயர் பற்றி பார்ப்போம்.

கிருஷ்ணதேவராயர்:


இந்திய வரலாற்றில் விஜயநகர பேரரசு ஒரு முக்கிய இடம் கொண்டுள்ளது. நான்கு மரபுகள்- சங்கம, சாளும, துளுவ, ஆரவீடு- கி.பி 1336 முதல் 1672 வரை விஜய நகரை ஆட்சி புரிந்தன.
விஜயநகரத்தின் மிகச்சிறந்த பேரரசரான கிருஷ்ண தேவாராயர் துளுவ மரபை சேர்ந்தவர். சிறந்த போர் ஆற்றல் மிக்கவராகவும், கம்பீரமான தோற்றம் கொண்டவராகவும் மற்றும் அறிவற்றால் நிரைந்தவராகவும் காணப்பட்டார். படையெடுத்து வரும் பாமினி அரசு படைகளை தடுத்து நிறுத்துவதே அவரது அப்போதைய முதல் கடமையாக இருந்தது. 1520ல் பீஜப்பூர் சுல்தான் இஸ்மாயில் அடில் ஷா என்பவரை தோற்கடித்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார். கஜபாதி மரபின் அரசரான பிரதாபருத்திரனை முறியடித்து தெலுங்கானா முழுவதையும் கைப்பற்றினார். போர்ச்சுக்கீசியர்களுடன் நட்பாகவே இருந்தார். தாம் வைணவராக இருந்த போதிலும் அனைத்து சமயங்களையும் மதித்து நடந்தார். கலை, இலக்கிய புரவலராக திகழ்ந்ததால் விஜயபோஜர் எனவும் அழைக்கப்பட்டார். தென்னிந்தியாவில் பெரும்பாலான கோவில்களை அவர் செப்பனிட்டார். விஜயநகரத்தில் விட்டலசுவாமி மற்றும் ஹசரராமசுவாமி ஆலயங்களையும் அவர் எழுப்பினார். தனது பட்டத்தரசி நாகலாதேவியின் நினைவாக அவர் நாகலாபுரம் என்ற நகரை நிர்மானித்தார்.

ஆட்சிமுறை :

ஆட்சி நன்கு சீரமைக்கப்பட்டு நிர்வாகம், நீதி, சட்டம் ஆகியவற்றில் அரசர் முழு அதிகாரம் பெற்று விளங்கினார். பேரரசு பல மண்டலங்களாவும், மண்டலம் பல நாடுகளாகவும், நாடு பல ஸ்தலங்களாகவும் பிரிக்கப்பட்டு இருந்தன. ஸ்தலம் என்பது பல கிராமங்களை கொண்டிருந்த பிரிவாகும். நிலவரி, துறைமுகங்களில் வசூலிக்கப்பட்ட சுங்கம், பல்வேறு தொழிலாளர்களின் மீதான வரிகள் ஆகியவை அரசின் வருவாயாக இருந்தது. விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது. நீதித்துறையை பொறுத்தவரையில் உடல் உறுப்பை சிதைத்தல், யானைக்காலால் இடருதல் போன்ற கொடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டது. ராணுவம் திறமையான முறையில் அமைக்கப்பட்டு இருந்தது. குதிரைப்படை, காலாட்படை, பீரங்கிப்படை, யானைப்படை என நான்கு பிரிவுகளாக இருந்தது. படைவீரர்களுக்கு ஊதியம் பெரும்பாலும் பணமாகவே வழங்கப்பட்டது.

சமூக வாழ்க்கை :

பட்டு மற்றும் பருத்தி உடைகளை மக்கள் உடுத்தினர். வாசனைப்பொருட்கள், மலர்கள், அணிகலன்கள் போன்றவற்றையும் மக்கள் பயன்படுத்தினர். நடனம், இசை, மல்யுத்தம், சூதாட்டம், சேவல் சண்டை போன்றவை ஒரு சில பொழுதுபோக்குகளாகும். மகளிர் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஒரு சிலர் மட்டுமே கல்வியில் சிறந்து விளங்கினர். ஹன்னம்மா மற்றும் திருமலம்மா ஆகியோர் அக்காலத்தில் புகழ்வாய்ந்த பெண்புலவர்கள் ஆவர். தேவதாசி முறை வழக்கத்தில் இருந்தது. அரசகுடும்பத்தில் பலதாரமணம் வழக்கில் இருந்தது.

பொருளாதார நிலை :

மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை. புதிய ஏரிகள் வெட்டப்பட்டு நீர்ப்பாசன வசதி சிறப்பாக இருந்தது. துங்கபத்திரா நதியின் குறுக்கே அணை கட்டப்பட்டது. பல்வேறு தொழில்கள் சிறந்து விளங்கின. முக்கிய தங்க நாணயம் வராகன் என்பதாகும். அயல்நாட்டு வணிகம் பெருகியதால் பொதுவாக நாட்டில் செல்வசெழிப்பு காணப்பட்டது. பருத்தி மற்றும் பட்டுத்துணிகள், நறுமணப்பொருட்கள், அரிசி, சர்க்கரை போன்றவை முக்கிய ஏற்றுமதிப்பொருட்கள் ஆகும். குதிரைகள், முத்துக்கள், செம்பு, பவளம், பாதரஸம், சீனத்துப்பட்டு, வெல்வெட்துணிகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.

கலை :

விஜயநகரம் இன்று ஹம்பி இடிபாடுகளாக காட்சியளித்தாலும் அங்குள்ள கோயில்கள் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். திருப்பதியில் காணப்படும் கிருஷ்ணதேவராயர் மற்றும் அவரது அரசிகளின் உலோகப்படிமங்கள் அவரது ஆட்சியின் உலோகக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாகும். வடமொழி, தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற மொழிகள் புகழ்பெற்றிருந்தன. இவரது ஆட்சிக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சம் பெற்றது என்றே சொல்லலாம்.

கிருஷ்ணதேவராயரதது மறைவுக்கு பிறகு அச்சுததேவர், வெங்கடர் ஆகியோர் அரியணை ஏறினர்.

பி.கு : நண்பர்களே இது ஒரு சிறு முயற்சி மட்டுமே. பிழையேதும் இருப்பின் தெரியப்படுத்தவும், சரி செய்து கொள்கிறேன்.

இதனை தொடர அண்ணன் கே.ஆர்.பி.செந்தில் அவர்களையும், நண்பன் செல்வாவையும் அன்புடன் அழைக்கிறேன்.

Wednesday, September 8, 2010

தீய‌ணைப்பு துறைக்கு சிவப்பு நிறம் ஏன்?


நம்ம வாழ்க்கைல நிறங்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. ஒவ்வொரு வண்ணமும் ஒரு விசயத்த பிரதிபலிக்கிற மாதிரி இருக்கும். சமாதானத்துக்கு ஒரு நிறம், சண்டைக்கு ஒரு நிறம், கோபத்துக்கு ஒரு நிறம், சந்தோசத்துக்கு ஒரு நிறம் இப்படி ஒவ்வொரு உணர்வுகளுக்கு ஒரு நிறத்தை ஒப்பிடலாம்.

ஏன் இந்த மாதிரி சொல்றேன்னா ரூம்‌ல தனியா இருந்த போது எனக்கு ஒரு பயங்கரமான சந்தேகம் வந்தது (தனியா இருக்கும்போது தான் நிறைய சந்தேகங்கள் வரும்). அது என்னன்னா தீய‌ணைப்பு துறைக்கு சிவப்பு நிறம் ஏன் கொடுத்தாங்க? ஏன் ஒரு ஆரஞ்சு கலரோ இல்ல ஒரு மஞ்ச கலரோ கொடுக்கல?

இத நான் பலபேர் கிட்ட கேட்டுப்பாத்தேன், ஆனா பாருங்க அவங்க யாருக்குமே தெரியல. அதனால நானே யோசிக்கலாமுன்னு முடிவு பண்ணி குப்புற படுத்து யோசிச்சேன் ம்ஹூம் ஒண்ணும் வரல.அப்புறமா மல்லாக்க படுத்து யோசிச்சேன் அப்பவும் வரல. ஒரு நாள் குளிச்சுட்டு இருக்கும் போது திடீர்னு ஒரு யோசனை வந்தது, அப்புறம் அத வச்சு பயங்கரமா யோசிச்சதுல ஒரு வழியா விடை கிடைச்சுது.

அது என்னான்னா தீய‌ணைப்பு வண்டில ஒரு ஏணி இருக்கும்ல, அதுல ஏறனும்னா என்ன பண்ணனும்? நம்ம பாதத்தை வச்சு தான் ஏறனும் (பாதத்தை வச்சு ஏறாமா அடிவயித்த வச்ச ஏறுவாங்கன்ணு நீங்க கேக்குறது தெரியுது). சரி பாதத்தை வச்சு ஏறியாச்சா, அதுக்கு அப்புறமா பாதத்தை அளக்கணும்னா அதுக்கு ஒரு ரூலர் தேவை. சரியா? ஒரு நாட்டோட ரூலர் யாருன்னு பாத்தா அது ராஜாவோ அல்லது ராணியாவோ தான் இருக்கணும். ராணின்னு சொன்னவுடனே தான் தோணுச்சு குயின் எலிசபெத் இங்கிலாந்து நாட்டோட ராணின்னு. அது மட்டும் இல்லாம எலிசபெத்-ங்கறது ஒரு கப்பலோட பேருங்கூட. கப்பல் எங்க இருக்கும்? எப்போதுமே தண்ணில தான தப்பு தப்பு தண்ணிக்குள்ள தான். ஜப்பான் இருக்கே ஜப்பான் அது நாலு பக்கமும் தண்ணியால சூழப்பட்ட நாடு. அந்த ஜப்பானோட தேசியக்கொடி கலர் சிவப்பு. அதனால தான் தீய‌ணைப்பு துறைக்கு சிவப்பு நிறம் கொடுத்து இருப்பாங்கன்னு தோணுது.

என்ன நாஞ்சொல்ற‌து, சரி தானே?

பி.கு : இதைவிட சரியான விளக்கம் தெரிந்தவர் யாரேனும் இருப்பின் பின்னூட்டம் மூலமாக தெரியப்படுத்தலாம். வரவேற்க்கப்படுகிறீர்கள்.

Monday, September 6, 2010

ஆசிரியர் தினம்படிப்பறிவித்த ஆசான்கள் அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

Friday, September 3, 2010

திருமண அழைப்பிதழ்

நான் பார்த்து வியந்த ஒரு வித்தியாசமான கல்யாண பத்திரிகை இது.நன்றி : மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்து கொண்ட நண்பர் ரஞ்சித் அவர்களுக்கு.

Tuesday, August 31, 2010

ரெண்டாங்கிளாஸ்


ஹையா... இன்னிக்கு நான் ஒண்ணாங்கிளாசுல இருந்து ரெண்டாங்கிளாசுக்கு போறேன். ஒண்ணுமே புரியலயா? ஆச்சுங்க இன்னியோட ஒரு வருசம் நானும் காலத்தில் இறங்கி. நானும் ஒரு வருசமா எழுதுறேன் அப்படின்னு நினைக்கும்போது எனக்கே பெருமையா இருக்கு. ஏதோ அவ்வப்போது தோன்றதை கிறுக்கிட்டு இருந்தேன். அதையே எழுத்து வடிவாக்கி பார்த்தபோது என்ன பெருமிதமா இருந்துச்சு தெரியுமா?

இந்த ஒரு வருசத்துல நான் நிறைய மாற்றங்களை சந்திச்சு இருக்கேன்(எல்லாமே நல்ல வழியிலதாங்க). அதற்காக பதிவுலகில் நான் படித்த எல்லா பதிவர்களுக்கும் என்னை படித்த எல்லாருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கேன்.

இந்த ஒரு வருச காலத்துல நான் எழுதியது மிகவும் குறைவு என்றாலும் எனக்கு கிடைத்த சந்தோசத்துக்கு அளவே இல்லை. அதற்கு நேரமின்மை, வேலைப்பளு மற்றும் இணைய வசதியின்மை என பல காரணங்கள் உண்டு. நான் எழுதிய பதிவுகளை போலவே எனக்கு கிடைத்த நண்பர்களும் குறைவு. ஏனெனில் ஆரம்ப காலங்களில் நான் எனது பதிவுகள் எதையுமே திரட்டிகளில் இணைத்ததில்லை. சொல்லப்போனால் எனக்கு அவற்றை பற்றி தெரியவும் இல்லை. ஒரு பத்து நாட்களுக்கு முன்புதான் திரட்டிகளில் இணைந்தேன்.இனிவரும் காலங்களில் அதிகமாக எழுதி நட்பு வட்டத்தை விரிக்க முடியும் என் நம்புகிறேன்.

என்னையும் மதிச்சு எனக்கு முதல் பின்னூட்டம் இட்ட நண்பன் ராஜூ மற்றும் முதல் பாலோயராக சேர்ந்த சீனா அய்யா அவர்களுக்கு முதல் நன்றிகள். எனது பாலோயர்களாக இருக்கும் சீனா, சித்ரா சாலமன், நிகே, தேவன் மாயம், விஜய், அம்பிகா, கே.ஆர்.பி.செந்தில், ஜில்தண்ணி - யோகேஷ், பனித்துளி சங்கர், எஸ்.கே, மலாக்கா முத்துக்கிருஷ்ணன், வெறும் பய, வால்பையன், செந்தில், நிஸ் (ராவணா), பதிவுலகில் பாபு, பிரியமுடன் ரமேஷ், ஜோதிஜி அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அடிக்கடி பின்னூட்டம் இட்ட சீனா அய்யா மற்றும் சித்ரா மேடம் இருவருக்கும் சிறப்பு நன்றிகள். மேலும் அவ்வப்போது வந்து பின்னூட்டம் இட்ட ராஜூ, லோகு, முரளிகுமார் பத்மநாபன், நிகே, பிரியமுடன் வசந்த், தேவன் மாயம், காயத்ரி, ரோஸ்விக், அண்ணாமலையான், ஆதிமூலகிருஷ்ணன், இல்லுமினாட்டி, ப்ரியா, விக்னேஷ்வரி, கலாநேசன், அம்பிகா, முனியாண்டி, ஜில்தண்ணி-யோகேஷ், கே.ஆர்.பி.செந்தில், நிகழ்காலத்தில், வேலு ஜி, நந்தா ஆண்டாள்மகன், எஸ்.கே, பிரியமுடன் பிரபு, மோகன், பிரியமுடன் ரமேஷ், பதிவுலகில் பாபு, படைப்பாளி மற்றும் அஹமது என அனைவருக்கும் நன்றிகள். சமீப காலமாக அடிக்கடி பின்னூட்டம் இட்ட வெறும்பய ஜெயந்த்க்கும் நன்றி.(வயதில் மூத்த பதிவர்கள் மன்னிக்கவும், ஏனெனில் அண்ணன், தம்பி, நண்பர், சார் போன்ற அடைமொழி இல்லாமல் வெறும் பெயர்களை மட்டுமே எழுதிவிட்டேன்.)
சித்ரா மேடமுக்கு தனியே ஒரு தேங்க்ஸ், ஏன்னா நான் என்ன எழுதினாலும் அதற்கு உடனே பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்தியதற்காக.

இன்னிக்கு பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் என் கல்லூரி நண்பன் மணிகண்டனுக்கும் என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

ரொம்ப நேரமா நன்றி சொல்லி சொல்லி வாய் வலிக்குதுங்க. அதனால ஒரு ரெஸ்ட் தேவை. மீண்டும் சந்திப்போம்.

டிஸ்கி : இன்னிக்கு நான் ஒண்ணாங்கிளாசுல இருந்து ரெண்டாங்கிளாசுக்கு போறேன். பாஸா? பெயிலா? நீங்கதான் சொல்லணும். சொல்லுவீங்களா?..

Sunday, August 29, 2010

என் காதல்..

உனை எண்ணி கவி எழுதி
கிழித்தெறிந்த காகிதங்களும்,
உன் படம் வரைந்து வரைந்தே
கரைந்து போன பென்சில்களும்,
உனையே நினைந்து நினைந்து
கூடிப்போன நினைவுப்புத்தகத்தின் பக்கங்களும்,
உன் நினைவால் வெறுமையாய் கழிந்த
என் நித்திரையற்ற இரவுகளும்,
என்றாவது ஒரு நாள்
உன்னிடம் சேர்க்கும்
உனக்கான என் காதலை...

Monday, August 23, 2010

மனசு

ஒரு நாள் பள்ளிக்கூட ஆசிரியை ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவர்களிடம் கொஞ்சம் தக்காளிகளை ஒரு பையில் எடுத்து வர சொன்னார். ஒவ்வொரு மாணவரும் தனக்கு பிடிக்காத அல்லது தான் வெறுக்கும் மாணவர்களை நினைத்து கொண்டு வர வேண்டும். எத்தனை தக்காளி உள்ளதோ அத்தனை பேரை பிடிக்கவில்லை என்று அர்த்தம். ஒவ்வொருவரும் இரண்டு, மூன்று எனவும், சிலர் ஐந்து கூடகொண்டு வந்திருந்தனர்.

ஒரு வாரம் வரையில் அவர்கள் எங்கு சென்றாலும் கூடவே தக்காளிகளை எடுத்து செல்லும்படி கூறினார். ஓரிரு நாட்களிலேயே மாணவர்கள் துர்நாற்றம் வீசுவதாகவும், அழுகிப்போய் எடுத்து செல்ல சிரமமாக இருப்பதாகவும் புகார் செய்ய தொடங்கினர்.

ஒரு வாரம் கழித்து "எப்படி இருந்தது இந்த ஒரு வாரம்?" என ஆசிரியை கேட்டார்.
மாணவர்கள் திரும்பவும் துர்நாற்றம் மற்றும் எடுத்து செல்வதில் இருந்த சிரமம் பற்றியும் சொன்னார்கள். அதற்கு ஆசிரியை சொன்னார் "இந்த பிரச்சனையும் மற்றவர் மேலுள்ள வெறுப்பை போலவே தான். அந்த வெறுப்பானது உங்களை பலவீனமாக்கிவிடும். கெட்டுப்போன தக்காளியின் துர்நாற்றத்தை ஒரு வாரம் பொறுக்க முடியவில்லையே. நினைத்து பாருங்கள் உங்கள் ஒவ்வொருவர் மனத்திலும் இருக்கக்கூடிய கனத்தை."

நாம் மனசு ஒரு அழகான பூந்தோட்டம், எனவே அதற்கு சீரான இடைவெளியில் களை எடுக்க வேண்டியது அவசியம். நீங்கள் எதிர்பார்த்த மாதிரி நடக்காதவர்களை மன்னித்து விடுங்கள் மற்றும் தவறாக நடந்த விசயங்களை மறந்து விடுங்கள். அவ்வாறு செய்வதனால் பல நல்ல விசயங்களை பதிவு செய்ய தேவையான இடமும் கிடைக்கும்.

மறப்போம்! மன்னிப்போம்! வளமாக வாழ்வோம்!

Tuesday, August 17, 2010

என்ன கொடுமை சார் இது?

என்ன கொடுமை சார் இது?

நேற்றைய கிரிக்கெட் மேட்ச் பார்த்த அனைவருக்கும் எழும் கேள்வி இது தான்.
என்ன தான் விளையாட்டில் வெற்றி தோல்வி முக்கியம் என்றாலும் ஒரு உண்மையான விளையாட்டு வீரனாக இருந்து காட்டியிருக்கலாம் ரந்திவ்.
எங்கே ஒரு ரன் அடித்தால் சேவாக் சதம் போட்டு விடுவாரோ என வேண்டுமென்றே நோ-பால் போட்டு விட்டார்.
கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டு என அழைக்கப்பட்டாலும் இவர் போன்றோரால் அந்த பெயருக்கே அவமானம்.
இன்னும் ஒரு பால் மட்டுமே உள்ளது 10 ரன் அடிக்கவேண்டும் என்று இருந்து இவ்வாறு செய்திருந்தால் கூட ஏற்று கொள்ளலாம்.
பாவம் சேவாக் அவரது மனநிலையை சற்று யோசித்து பாருங்கள். சிக்ஸர் அடித்தும் கணக்கில் வராமல் போய் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
என்னத்த சொல்ல.... :( :( :(
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
வல்லபாய் பட்டேல் சிலை:

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிவிப்பு என்னவென்றால் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கு உலகிலேயே மிகப்பெரிய சிலை அமைப்பராம்.
நர்மதா அணையின் கரையோரம் அமையாப்பொகும் இந்த சிலையின் உயரம் 180 மீட்டராகும்.
மொத்த அணை நிரம்பி இருந்தால் அதன் நீர் மட்டம் 138 மீட்டர் இருக்கும். சிலையின் உயரம் அதை விட அதிகமாக இருப்பது இதன் தனிச்சிறப்பு.
இன்னும் அதிகரப்பூர்வமாக அறிவிப்பு வராவிட்டாலும் சிலை அமைக்கபோவதென்பதோ உறுதி.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்து:


இன்று 47வது பிறந்த நாள் கொண்டாடும் இயக்குனர் சங்கர் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Sunday, August 15, 2010

சுதந்திர தினம்


உலகெங்கும் உள்ள ஒவ்வொரு இந்தியனுக்கும் என் உளம் கனிந்த
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
.

Thursday, August 5, 2010

போதை.

நம்ம ஆளுங்க சில பேர் பார்க்க ரொம்ப அமைதியா இருப்பாங்க. ஆனா கொஞ்சம் போதை ஏறுனதுக்கு அப்புறம் பயங்கர அவதாரம் காட்டுவாங்க. இவங்களா இப்படி பேசறதுங்கர மாதிரி இருக்கும். அந்த மாதிரி நண்பர்கள் கூட நான் அடிக்கடி இருப்பது வழக்கம் (என்ன பண்றது வேற வழி இல்லாம தான்). சரக்குக்கு அப்புறம் அவங்க என்ன சொல்றாங்க அப்படீங்கறதை பார்த்தா பெரும்பாலும் ஒன்னாவே இருக்கும்...

அந்த மாதிரி அடிக்கடி பயன்படுத்தற வார்த்தைகள் இதோ....

· நீ என் உயிர் நண்பன்டா

· வண்டிய நான் தான் ஓட்டுவேன்

· என் மனசால உன்னை மதிக்கிறேன் நண்பா

· இன்னிக்கு போதையே ஏறலைடா

· குடிச்சுட்டு பேசறேன்னு நெனக்காத

· இன்னும் ஒரு ரவுண்டு போலாம்

· உனக்காக உயிரையே கொடுப்பேன்

· நீ எனக்கே சொல்லி தர்றியா

· அவ மட்டும் கிடைச்சு இருந்தா இன்னிக்கு இது என் கையிலயே இருந்திருக்காது

எல்லாத்திலேயும் டாப் இது தான்

· நாளைல இருந்து குடிக்கவே மாட்டேன்.